தெலங்கானா மாநிலம் மிரியால குடா அருகே அரசுப்பேருந்து மீது டிப்பர் லாரி கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
தந்தூர் டிப்போவைச் சேர்ந்த ஆர்டிசி அரசு பேருந்து ஹைதராபாத் நோக்கி 70 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த டிப்பர் லாரி பேருந்தை நேருக்கு நேர் மோதியது. உடனடியாக மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. பலர் படுகாயமடைந்து செவெல்லா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
விபத்தால் ஹைதராபாத்–பிஜாப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. செவெல்லா–விகாராபாத் பாதையில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவத்திற்கு தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள தலைமைச் செயலாளர் கே. ராமகிருஷ்ணா ராவுக்கும், காவல் துறை இயக்குநர் பி. சிவதர் ரெட்டிக்கும் உத்தரவிட்டார்.
அனைத்து காயமடைந்தவர்களும் உடனடியாக சிறந்த மருத்துவ வசதிகளுடன் ஹைதராபாத் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட வேண்டும் என்றும், நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார். போலீசார் கூறுவதன்படி, விபத்துக்கான முதற்கட்ட காரணம் லாரி ஓட்டுநர் அதிவேகமாக வாகனம் ஓட்டி கட்டுப்பாட்டை இழந்ததாக இருக்கலாம். சம்பவத்திற்கான விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த துயரச் சம்பவம் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



