சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற குறுகிய காலத்திலேயே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சிக்குத் தாவுவதும், அதனால் மக்களின் வரிப்பணத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதும் வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய 6 தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர். இதில் அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு ஏற்கனவே இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதேசமயம் வழக்குகள் இல்லாததால் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்வதால், மக்களின் வரிப்பணத்தில் வீணாக இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. எனவே, தேர்தல் செலவுத் தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்தே வசூலிக்கும் நடைமுறையை உருவாக்க வேண்டும். மேலும், தேர்தல் முடிந்து குறுகிய காலத்தில் மக்கள் தீர்ப்பைப் புறக்கணித்து பதவி விலகுபவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் தங்களின் முழு நம்பிக்கையின் அடிப்படையிலேயே பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், சுய லாபத்திற்காகப் பதவி விலகி குறுகிய காலத்தில் மீண்டும் தேர்தலை எதிர்கொள்வது ஜனநாயக அமைப்பையே கேலிக்கூத்தாக்கும் செயல்.
இது ஒட்டுமொத்த வாக்காளர்களையும் அவமதிக்கும் செயலாகும். குறுகிய காலத்தில் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதைத் தடுப்பது குறித்துத் தேர்தல் ஆணையம் உரிய ஆய்வு செய்ய வேண்டும். இருப்பினும், இத்தகைய சூழல்களைத் தடுக்க தற்போது சட்ட ரீதியான வழிமுறைகள் எதுவும் இல்லாததாலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இதே விவகாரம் தொடர்பான வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கையும் அதனுடன் சேர்த்து விசாரிக்கப் பரிந்துரைத்து வழக்கை ஒத்திவைத்தனர்.



