கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை நிலவும் வளிமண்டல மாற்றங்கள் காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்குப் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தற்போது வட உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகத்தின் வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நீடிக்கிறது. அதேபோல், தெற்கு ஆந்திரக் கடலோரம் மற்றும் ராயலசீமா வான்வெளியில் 1.5 கி.மீ உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியும் சேர்ந்துள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை தீவிரமடைந்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களான கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளது. மேலும் சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட மத்திய மற்றும் தென் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பதிவாகக்கூடும்.
நாளை கரூர், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மத்திய மாவட்டங்களிலும், நீலகிரி மற்றும் கோவையிலும் கனமழை தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், சேலம், தருமபுரி, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் பல்வேறு இடங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நகரில் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டி நிலவும்.
மழை தீவிரமடைந்துள்ள அதே வேளையில், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.



