சென்னையில் உள்ள பலருக்கும் தெரியாத ஆனாலும் மிகுந்த தெய்வீக சக்தி கொண்ட ஒரு சிறிய ஆலயம் தான் அன்னை நிமிஷாம்பாள் கோவில். சவுகார்பேட்டை காசிசெட்டி தெருவில் அமைந்துள்ள இந்த கோவில், பரபரப்பான நகர வாழ்க்கையிலும் மனநிம்மதி தரும் தலமாக இருக்கிறது. குறிப்பாக தசமி திதி நாளில் இங்கு பக்தர்கள் திரளாக வந்து வழிபடுகிறார்கள்.
“நிமிஷம்” என்பது சமஸ்கிருதத்தில் “கண்” என்று பொருள். நிமிஷாம்பாள் என்பது “ஒரே பார்வையால் பக்தர்களின் துன்பங்களை நீக்கும் அன்னை” என்று பொருள்படும். இது லலிதா சகஸ்ரநாமத்தில் இடம்பெற்றுள்ள திருநாமங்களில் ஒன்றாகும். புராண கதைகளின்படி, முன்பு முக்தராஜன் என்ற மன்னன் ஆட்சி செய்த போது, ஜானு சுமண்டலன் என்ற அசுரன் மக்களை துன்புறுத்தினான்.
அப்போது யாகம் ஒன்றில் இருந்து பத்து கரங்களுடன் ஆயுதங்களைத் தாங்கி அன்னை பராசக்தி வெளிப்பட்டாள். அவள் தனது “ஒரு பார்வையாலேயே” அந்த அசுரனை சாம்பலாக்கினாள். அந்த நொடிக்கே அன்னை நிமிஷாம்பாள் எனப் பெயர் பெற்றாள். இந்த நிமிஷாம்பாள் வழிபாடு முதலில் கர்நாடகாவில் துவங்கியது.
பிறகு 17ம் நூற்றாண்டில் மும்மடி கிருஷ்ணராஜ உடையார் என்பவர் முதல் கோவிலை கட்டினார். சென்னையில் நிமிஷாம்பாள் கோவில் சவுகார்பேட்டை காசிசெட்டி தெருவில் மட்டுமே உள்ளது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு, வடமாநில வியாபாரிகள் இங்கு தங்கள் குலதெய்வமாக நிமிஷாம்பாளை வழிபட துவங்கினர். அவர்கள் தோண்டிய கிணற்றில் அன்னையின் பொற்கொலுவான உற்சவர் சிலை கிடைத்தது.
அந்த இடமே இன்று நிமிஷாம்பாள் ஆலயமாக விளங்குகிறது. மூன்று நிலை சிறிய கோபுரத்துடன் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் நுழைந்தவுடன் அன்னையின் அருள்பாலன முகம் தரிசிக்கலாம். அம்மன் சன்னதிக்கு அருகில் விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், சிவன், நவகிரக சன்னதிகளும் உள்ளன. ஆதிசங்கரர் வந்து வழிபட்ட புண்ணிய தலமாகவும் இக்கோவில் கருதப்படுகிறது.
அன்னை நிமிஷாம்பாள் யாககுண்டத்தில் இருந்து வெளிப்பட்டது தசமி நாளில் என்பதால், இன்றும் தசமி திதி நாளில் அதிகமான பக்தர்கள் வந்து நெய்விளக்கு ஏற்றி, தங்களின் வேண்டுதல்களைப் பிரார்த்திக்கிறார்கள். பத்து தசமி வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்றாலும், பெரும்பாலானவர்களின் வேண்டுதல் ஐந்தாவது தசமிக்குள் நிறைவேறும் என நம்பப்படுகிறது. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், அன்னைக்கு அபிஷேகம் செய்து, புடவை சாற்றி, பிரசாதம் படைத்து நன்றியுடன் வழிபடுகிறார்கள்.



