திருவண்ணாமலை மாவட்டம் கழிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி அம்சா (28). இவர்களுக்கு நிவிஸ்தா (4) என்ற மகளும், நிவிலன் என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர். சில தினங்களுக்கு முன்பு நிவிலனை அழைத்து அம்சா திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன்பின் இருவரும் வீடு திரும்பவில்லை.
இரவில் சாலையோரம் குழந்தை மட்டும் தனியாக அழுது கொண்டிருந்தது. பெண் ஒருவர் குழந்தையை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் விசாரித்தபோது அது சக்திவேலின் குழந்தை நிவிலன் என்பது தெரியவந்தது. போலீசார் சக்திவேலை வரவழைத்து குழந்தையை ஒப்படைத்தனர்.
ஆனால் அம்சா பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேடினர். இந்த நிலையில் நேற்று ஏந்தல் சம்மந்தனூர் கரும்புத் தோட்டத்தில் மூட்டையில் இளம்பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
போலீசார் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் அம்சா என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொலை செய்தது கழிக்குளம் பகுதியை சேர்ந்த நேத்ரா (30) எனத் தெரியவந்தது. போலீசார் அளித்த தகவலின்படி, கணவரைப் பிரிந்த நேத்ராவுக்கு திருப்பதி என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது..
அம்சா மருத்துவமனைக்குச் செல்லும்போது நேத்ரா ஆட்டோவில் பார்த்து பேச்சுக் கொடுத்தார். ஒரே ஊர் என்பதால் அம்சா சகஜமாகப் பேசியுள்ளார். அம்சாவின் 4 பவுன் தங்கச் செயினைப் பார்த்த நேத்ரா அதைப் பறிக்கத் திட்டமிட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்று தாக்கி செயினைப் பறித்துள்ளார்.
பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்து உடலை சாக்கில் கட்டி கரும்புத் தோட்டத்தில் வீசியுள்ளனர். சந்தேகம் வராமல் இருக்க குழந்தையை எஸ்.கே.பி கல்லூரி அருகே விட்டுவிட்டு தப்பியுள்ளார். நேத்ராவையும் அவரது கள்ளக்காதலனையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 4 பவுன் தங்க செயினுக்காக பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



