கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளக்காரன்பட்டியை சேர்ந்தவர் வினிதா (21). திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி பி.பார்ம் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித் (25) என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ரஞ்சித் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் ரஞ்சித்தின் நடவடிக்கைகள் சரி இல்லை என அறிந்த வினிதா ப்ரேக் அப் செய்துள்ளார். உறவை மீண்டும் தொடர ரஞ்சித் அழுத்தம் கொடுத்த போதிலும் வினிதா மறுத்துள்ளார். இதனால் ரஞ்சித் கடும் கோபத்தில் இருந்துள்ளார். நேற்று வினிதாவிற்கு உடல்நிலை சரி இல்லை என்பதால் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனை அறிந்த ரஞ்சித் வினிதாவை பழிவாங்க திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி இரவு 11.30 மணி அளவில் கொதிக்க வைத்த எண்ணெய்யை எடுத்து வந்த ரஞ்சித், வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த வினிதா மீது ஜன்னல் வழியாக ஊற்றி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். வலியில் அலறி துடித்த வினிதாவை மீட்டு பெற்றோர் மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வினிதாவின் உடல் மற்றும் முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பெற்றோர் பாலவிடுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிரடி..!!



