கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூரைச் சேர்ந்த கீர்த்தி என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரது கணவர் 2022-ஆம் உயிரிழந்த நிலையில் தனது மகளை வளர்க்க தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது சுனில் (33) என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாள் இருவரும் பழகி வந்த நிலையில் கீர்த்தியை காதல் வலையில் சிக்க வைத்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களின் திருமணம், சிக்கபல்லாபூர் துணைப் பதிவுத் துறையில் சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டது.
தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் கீர்த்தியை சுனில் தனது குடும்பத்தின் எதிர்ப்பைக் காரணம் காட்டி விட்டு வெளியேறினார். அதிர்ச்சியளிக்கும் வகையில் சில நாட்களிலெ வேறு ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் நீதி கேட்டு கணவன் சுனிலின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு நிறை மாத கர்ப்பிணி ஆன கீர்த்தியை சுனிலின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறை குழு, கர்ப்பிணியான கீர்த்தியை மீட்டு சிக்கபல்லாபூர் தாய் மற்றும் குழந்தை மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே கீர்த்தியின் மகளை சுனில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கீர்த்தி போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக இதற்கு முன்னரே, கீர்த்தி சுனிலுக்கு எதிராக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்ததும், அப்போது அவர் தனது மனைவியை நன்றாக கவனிப்பதாக எழுத்து மூலம் உறுதி அளித்துள்ளது தெரியவந்தது.