வழக்கமாக பெருமாள் கோவில்களில் மட்டுமே பக்தர்களுக்கு சடாரி சேவை வழங்கப்படும். ஆனால் நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் எனப்படும் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் வேறு எந்த சிவன் கோவிலிலும் இல்லாத தனிச் சிறப்பாக ஜடாரி சேவை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
கோவிலின் தனி சிறப்புகள்:
* ஒரு நாளில் ஐந்து முறை, அதாவது 2.5 மணி நேரத்திற்கு ஒருமுறை, இங்கு இருக்கும் சுயம்பு சிவலிங்கம் தனது நிறத்தை மாற்றுகிறது.
* ஒரே கருவறையில் இரண்டு சிவலிங்கங்கள்,
* அதே கருவறையில் சிவபர்வதிகள் திருமண கோலத்தில்,
* விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் ஒரே இடத்தில் காட்சி தருவது,
* இதோடு சேர்த்து, பெருமாள் கோவில்களில் மட்டும் உள்ள ஜடாரி சேவையும்,
இவையெல்லாம் சேர்ந்து, இந்த ஆலயத்தை உலகிலேயே தனித்துவமான சிவன் கோவிலாக உயர்த்துகின்றன.
புராண கதைகளின்படி, கைலாயத்தில் சிவ பெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றது. இதை காண அனைத்து தெய்வங்களும் ஒரே இடத்தில் கூடியதால் பாரம் தாங்க முடியாமல் பூமி சமநிலையை இழந்தது. இதனால் பூமியை சமநிலைப்படுத்த அகத்திய முனிவரை தென் திசை நோக்கி செல்லும் படி சிவ பெருமான் ஆணையிட்டார். சிவ-பார்வதி திருமணத்தை காண வேண்டும் என்ற விருப்பத்தை தியாகம் செய்து, சிவனின் கட்டளைப்படி, தென்திசை நோக்கி சென்றார் அகத்தியர்.
கும்பகோணம் அருகில் உள்ள நல்லூர் தலத்தில் சுயம்பு லிங்கம் இருப்பதை கண்ட அகத்தியர், அதற்கு அருகில் தானும் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவருக்கு இந்த தலத்தில் திருமண கோலத்திலேயே சிவனும், பார்வதியும் காட்சி அளித்தனர்.
மகாபாரதத்துடன் இந்த ஆலயத்திற்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக தல புராணம் சொல்கிறது. திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தையை பெற்றெடுத்து, அந்த குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்ட பாவம், பாண்டவர்களின் தாயான குந்தி தேவிக்கு இருந்தது. இந்த பாவம் தீர நாரதரிடம் வழி கேட்க, அவரோ மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் ஏழு கடல்களில் நீராடினால் இந்த பாவம் தீரும் என்றார்.
அது எப்படி முடியும் என திகைத்து நின்ற குந்தி தேவி, நாரதரின் அறிவுரையின் படி இந்த தலத்திற்கு வந்து சிவ பெருமானை வேண்டினார். அவளின் வேண்டுதலை ஏற்ற சிவ பெருமான், ஏழு கடல்களையும் இங்குள்ள குளத்தில் எழுந்தருள செய்தார். அதில் மூழ்கி எழுந்த குந்தி தேவியின் பாவம் நீங்கியது. குந்தி தேவியின் பாவத்தை தீர்க்க ஏழு கடல்கள் ஒன்றான தீர்த்தம் என்பதால் இதற்கு சப்தசாகர தீர்த்தம் என்று பெயர்.
இத்தலத்தில் அமரநீதி நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டது. ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் கோவிலில் உள்ளது. இதில் அருள்பாலிக்கும் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு, திருமணம் ஆகாதவர்கள் அர்ச்சனை செய்தால் 90 நாட்களில் திருமணம் நிச்சயமாகும் என பக்தர்கள் நம்பிக்கை செலுத்துகின்றனர். அதேபோல், குழந்தை வரம், சுக பிரசவம், உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகவும் பெண்கள் வருகை தருகிறார்கள்.
Read more: “ப்ளீஸ்.. ChatGPT-யை அதிகம் நம்பாதீர்கள்!” – OpenAI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கை