ஆன்மிக சிறப்புகள் நிறைந்த புரட்டாசி மாதம் என்றாலே திருப்பதி பிரம்மோற்சவம், தேவி பராசக்தியின் நவராத்திரி வைபவம் மற்றும் பெருமாள் ஆலய உற்சவங்கள் நினைவுக்கு வரும். இதில் மிக முக்கியமாக, புரட்டாசி சனிக்கிழமைகளில் திருமால் அவதாரமான திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவது விசேஷ பலன்களை தரக்கூடியதாகும். சனீஸ்வர பகவான் அவதரித்த மாதம் புரட்டாசி என்பதால், ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்த்தாஷ்டமச் சனி உள்ளிட்ட சனிதோஷங்களால் ஏற்படும் இடர்ப்பாடுகள் நீங்கி நல்வாழ்வு பெற, காக்கும் கடவுளான திருமாலை இக்காலகட்டத்தில் விரதமிருந்து சரணடைவது ஆன்றோர் மரபாகத் தொன்றுதொட்டுப் பின்பற்றப்படுகிறது.
இப்பண்டிகையின் பிரதான வழிபாடாக மாவிளக்கு பூஜை விளங்குகிறது. பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் கலந்து தயாரிக்கப்படும் மாவிளக்கில் பசும்நெய் இட்டு மலையப்ப சுவாமியை ஆவாஹனம் செய்து தீபமேற்றுவர். வசதியுள்ளவர்கள் உருளியில் அகண்ட நெய் தீபமேற்றி வெங்கடேச சஹஸ்ரநாமம், அஷ்டகம் மற்றும் துளசி தளங்களால் அர்ச்சனை செய்வர். மண்பூ மாலை சாற்றிப் பெருமாளின் அருளைப் பெற்ற ஏழை பக்தர் பீமனின் தூய பக்தியை நினைவுகூரும் வகையில், திருப்பதியில் இன்றும் நைவேத்தியம் மண்சட்டியிலேயே படைக்கப்படுவது இதன் பக்தி ஆழத்தை உணர்த்துகிறது.
பூஜையின் நிறைவில் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, வெண்ணெய்-சர்க்கரை கலந்த நவநீதம், எள் சாதம் போன்றவற்றை நிவேதனம் செய்து, குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்களோடு “கோவிந்தா… கோவிந்தா…” என நாமம் முழங்கி வணங்குவர். மேலும், சிறுவர்களைக் கொண்டு கோவிந்த நாமமிட்ட பாத்திரத்தில் ‘கோவிந்தா பிச்சை’ எடுப்பதும், விருந்தினர்கள் மற்றும் அந்தணர்களுக்கு சமாராதனை (அன்னதானம்) வழங்கி தாம்பூலம் அளிப்பதும் பெரும் புண்ணியத்தைத் தரும். இத்தகைய முறையான புரட்டாசி விரத வழிபாட்டின் மூலம் சனிதோஷங்கள் விலகி, இல்லத்தில் வறுமை நீங்கி வற்றாத லட்சுமி கடாட்சமும் மன அமைதியும் நிறையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
Read More : குட் நியூஸ்..!! அனைத்துப் பள்ளிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!!



