காஞ்சிபுரத்தின் புனித மண்ணில் எண்ணற்ற சிவத் தலங்கள் இருந்தாலும், அதில் தனித்துவம் பெறும் கோவில் கைலாசநாதர் சமேத கனகாம்பிகை தாயார் திருக்கோவில். இத்தலம், புராண வரலாறு, இயற்கை அமைப்பு, ஆன்மிக ஆழம் ஆகியவற்றை ஒருங்கே இணைக்கும் அதிசயமான தலம்.
புராண கதைகளின்படி, ஈசன் பூலோக அழகை ரசிக்க வந்தபோது, நத்தம் எனும் ஊரில் தங்கி, பாலாற்றின் நடுவே அமைந்த மலைப்பகுதியில் தவம் செய்து கொண்டதாகும். அப்பொழுது வருணன் மழை பொழிந்தபோது, அந்த மழையில் ஈசன் நனைந்து விடாதபடி, ஒரு பசுமாடு அருகில் வந்து நின்றது. அதன் பின், ராஜநாகமும் தன்னை குடையாக விரித்து ஈசனை காத்ததாக குறிப்பிடப்படுகிறது.
இவ்விரு உயிர்களின் பக்தியையும் உணர்ந்த ஈசன், அவர்களுக்கு “இத்தலத்தில் நான் குடியிருந்து பக்தர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றுவேன்” என வரம் அளித்ததாக புராணம் சொல்லுகிறது. அதன்படி, கைலாசத்திலிருந்து லிங்க வடிவில் வெளிப்பட்டு, கைலாசநாதராக இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.
சுமார் ஐந்து அடி உயரத்தில் பத்மபீடத்தில் எழுந்தருளிய இந்த லிங்கத்தின் அருகில், கனகாம்பிகை தாயார் தன்னுடைய கருணை நிறைந்த முகத்தோடு பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றார். இந்தக் கோவிலின் விநாயகர் திருவுருவம் தனித்துவம் வாய்ந்தது என்பதோடு, நவகிரகங்கள், சண்டிகேஸ்வரர், வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான், தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
இத்தலத்தில் பங்குனி உத்திரத் திருவிழா மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் தரிசனம் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி, அமைதியான குடும்ப வாழ்க்கை கைகூடும் எனும் நம்பிக்கை நிலவுகிறது. மேலும், சிவராத்திரி நான்கு கால பூஜை, பிரதோஷ வழிபாடு, அன்னாபிஷேகம் போன்ற சிறப்பு நிகழ்வுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
தலவிருட்சமாக விளங்கும் வில்வமரம், மற்றும் நீரின் மேல் அமைந்துள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி, குருவின் அருளை நாடுவோருக்கு மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது. புராண வரலாறும் ஆன்மிக மகிமையும் இணைந்த கைலாசநாதர் சமேத கனகாம்பிகை தாயார் கோவில், காஞ்சிபுரத்தின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாகவும், பக்தர்களின் நம்பிக்கையின் மையமாகவும் திகழ்கிறது.
Read more: இந்த காரின் விலை ரூ. 230 கோடி.. அப்படி இதுல என்ன ஸ்பெஷல்..? வாங்க பார்க்கலாம்..



