பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் மாற்றம் மீண்டும் தொடர்ந்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான வரவிருக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக, டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து சல்மான் அலி ஆகா நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் அணியிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடருக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக சாகிப்ஸாதா ஃபர்ஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான அனைத்து டி20 போட்டிகளுமே ராவல்பிண்டியில் வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) முதல் தொடங்கவுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை வழிநடத்தி வெள்ளிப் பதக்கம் வெல்ல உதவினார் ஃபர்ஹான். இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோல்வியடைந்தது. தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள கேப்டன் பதவி தற்காலிகமானது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சல்மான் அலி ஆகா தவிர, 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய டெஸ்ட் கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் ஷஹீன் அஃப்ரிடி ஆகிய இருவரையும் டி20 அணியிலிருந்து பாகிஸ்தான் தேர்வுக்குழு நீக்கியுள்ளது.
முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம் இல்லாததால் பாகிஸ்தான் அணியை சல்மான் அலி ஆகா வழிநடத்தினார். ஆனால், இரண்டாவது டெஸ்டில் அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. பின்னர் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அணியிலிருந்தே விடுவிக்கப்பட்டார். தற்போது டி20 அணியிலும் அவர் தனது இடத்தை இழந்துள்ளார்.
2025-ஆம் ஆண்டில் முகமது ரிஸ்வானுக்குப் பதிலாக டி20 அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆகா, 2026 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி வரை அணியை அழைத்துச் சென்றார். மேலும், டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது சுற்று வரை பாகிஸ்தான் முன்னேற உதவினார்.
அதேவேளையில், இங்கிலாந்துக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரசாவுல்லா , டி20 அணி மற்றும் அதற்குப் பின் நடைபெறவுள்ள ஒருநாள் முக்கோணத் தொடர் (இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுடனான தொடர்) ஆகிய இரண்டிலும் இடம் பிடித்துள்ளார். இந்த ஒருநாள் முக்கோணத் தொடர் அக்டோபர் 18 அன்று லாகூரில் தொடங்குகிறது.
இலங்கைக்கு எதிரான பாகிஸ்தான் டி20 அணி: சாகிப்ஸாதா ஃபர்ஹான் (கேப்டன்), அப்துல் சமத், அப்ரார் அகமது, அரஃபாத் மின்ஹாஸ், ஃபகார் ஜமான், ஹசன் நவாஸ், கவாஜா நபாய் (விக்கெட் கீப்பர்), மாஸ் சதாகத், முகமது சல்மான் மிர்சா, முகமது இம்ரான் ரந்தாவா, நசீம் ஷா, ரசாவுல்லா, சைம் அயூப், ஷதாப் கான், சுஃபியான் மொகிம்.
ஒருநாள் போட்டி தொடருக்கான பாகிஸ்தான் அணி: ஷஹீன் ஷா அஃப்ரிடி (கேப்டன்), அப்ரார் அகமது, அரஃபாத் மின்ஹாஸ், பாபர் அசாம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் நவாஸ், முகமது காசி கோரி (விக்கெட் கீப்பர்), நசீம் ஷா, ரசாவுல்லா, சாத் பெய்க் (விக்கெட் கீப்பர்), சைம் அயூப், சல்மான் அலி ஆகா, ஷதாப் கான், சுஃபியான் மொகிம்.



