துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல் அவீவ் நகரிற்குச் சென்ற ‘ப்ளைதுபாய்’ விமானத்தை மோதி விபத்துக்குள்ளாக்க சதித் திட்டம் தீட்டிய துணை கேப்டனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ‘நியூயார்க் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட துணை விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்த 29 வயதான ஹமாம் அல்-ஹம்மாமி (Hamam al-Hammami) என அடையாளம் காணப்பட்டுள்ளார். விசாரணையின் போது அவர் அளித்த வாக்குமூலத்தில், துபாயில் இருந்து டெல் அவீவ் சென்ற FZ1073 என்ற விமானத்தைக் கடத்தி, பென் குரியன் விமான நிலையத்திலோ அல்லது டெல் அவீவ் நகரில் உள்ள ஏதேனும் ஒரு உயரமான கட்டிடத்தின் மீதோ மோதி விபத்துக்குள்ளாக்க திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
“டெல் அவீவ் செல்லும் அனைத்து விமான நிறுவனங்களிலும் வேலைக்குச் சேர முயன்றேன். அதனால் தான் ‘ப்ளைதுபாய்’ நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்தேன். வேலைக்குச் சேர்வதற்கு முன்பே இந்தத் தாக்குதலுக்குத் திட்டம் தீட்டினேன். பென்-குரியன் விமான நிலையத்தில் மோத வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது” என்று அவர் விசாரணையில் கூறியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தற்போது சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வரும் அல்-ஹம்மாமி, தனி நபராகவே இந்தச் சதியில் ஈடுபட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவரிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்திய கேப்டன் மீது தாக்குதல்:
துபாயில் இருந்து டெல் அவீவ் சென்ற அந்த விமானத்தில் பறந்துகொண்டிருந்தபோதே, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி, விமானத்தின் இந்தியக் கேப்டனைக் கத்தியால் குத்திவிட்டு விமானத்தைக் கீழே வீழ்த்த முயன்றுள்ளார். அதன்பின்னரே இந்தச் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இஸ்ரேலுடன் அதிகாரப்பூர்வ தூதரக உறவு இல்லாத ஒரு நாட்டைச் சேர்ந்த விமானிக்கு டெல் அவீவ் செல்லும் விமானத்தை இயக்க எவ்வாறு பாதுகாப்பு அனுமதி வழங்கப்பட்டது என்று இஸ்ரேலில் கடும் காரசாரமான கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவு:
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு வரும் அனைத்து சர்வதேச விமானங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முழுமையான மற்றும் தீவிரமான ஆய்வை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் சாமுவேல் பென் எஸ்ராவிற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளையில், வெளிநாட்டு விமான நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்களின் பாதுகாப்பு மேற்பார்வை, இஸ்ரேலின் வெளியுறவு மற்றும் உள்நாட்டு உளவு அமைப்புகளான ‘மொசாத்’ (Mossad) மற்றும் ‘ஷின் பெட்’ (Shin Bet) ஆகியவற்றின் கீழ் மட்டுமே வருவதாக இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சர் மிரி ரெகேவ் தெரிவித்துள்ளார்.



