ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாயி மாவட்டம் சோமந்தூர்பள்ளியைச் சேர்ந்த 22 வயதான ஹர்ஷிதா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாகேந்திராவை இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமண விழா உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் பங்கேற்புடன் மிகவும் மகிழ்ச்சியாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மணமக்கள் ஹர்ஷிதாவின் இல்லத்தில் தங்கியிருந்தனர்.
முதல் இரவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த வேளையில், ஹர்ஷிதா தன் அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டார். நீண்ட நேரமாக வெளியே வராததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலையடைந்து கதவை தட்டினர். பதில் எதுவும் வராத நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்ற அவர்கள், ஹர்ஷிதா மின்விசிறியில் தூக்கில் தொங்கியதை பார்த்து பதற்றமடைந்தனர்.
உடனடியாக பெனுகொண்டா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதும், மருத்துவர் ஹர்ஷிதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருபுற குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு முன்பாக அல்லது பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரிக்கின்றனர். ஹர்ஷிதாவின் அலைபேசியில் உள்ள தகவல்களும், அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளும் சோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் ஆணும், பெண்ணும் பல கனவுகளோடும், கற்பனைகளோடும் இருப்பார்கள். இந்த திருமணத்தில் அடியெடுத்து வைத்த ஒரு இளம்பெண், முதல் நாளிலேயே தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. 17 பேரின் குண்டர் சட்டம் ரத்து..!! – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு