திருநெல்வேலியில் செப்டம்பர் 7-ல் மாநில மாநாட்டில் பங்கேற்க கட்சி நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில்: சமீபத்தில் பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியிருக்கிறது. இதை எதிர்த்து சமீபத்தில் வாக்காளர் உரிமை பயணத்தை பிஹார் மாநிலத்தில் மக்களின் பேராதரவோடு ராகுல்காந்தி நடத்தியிருக்கிறார்.
வாக்கு திருட்டு மோசடி குறித்து மக்களிடையே தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளும் விதமாக, மாநில அளவில் மாநாடு செப்.7-ம் தேதி திருநெல் வேலியில் நடைபெற உள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். ராகுல் காந்தியின் பிரச்சாரத்துக்கு வலு சேர்க்கும் வகையில், தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலிருந்தும் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அணி திரண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.



