ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்ட சிசாய் பகுதியை சேர்ந்த ரிங்கு சாஹு (32), சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஊர்மிளா குமாரி (27) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் தற்போது மூன்று வயது மகள் உள்ளார். திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாக சென்றுகொண்டிருந்தது. ஆனால், சில மாதங்களாக பீகார் மாநிலம் கயா மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர் அவினாஷ் குமார் (30) என்பவருடன் ஊர்மிளா நெருக்கமாக பழகி வந்ததாக கிராமத்தில் பேச்சு பரவியது.
கணவர் ரிங்கு பலமுறை ஊர்மிளாவை சமாதானப்படுத்தி, குடும்பத்தை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டார். ஊர்மிளாவின் பெற்றோரும் இதேபோல் அறிவுரை கூறினர். ஆனால், காதலின் மீது அதிக பற்றுடன் இருந்த ஊர்மிளா எதையும் கேட்க மறுத்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று நள்ளிரவு, ஊர்மிளா வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்து, காதலன் அவினாஷுடன் ஓடத் திட்டமிட்டார். அதை கவனித்த ரிங்கு, உடனடியாக எச்சரிக்கை எழுப்பி கிராம மக்களை அழைத்தார். சில நிமிடங்களில் அப்பகுதி மக்கள் கூடிவிட்டனர். சம்பவம் குறித்து உடனடியாக பஞ்சாயத்து கூட்டம் நடத்தப்பட்டது. அதில், ரிங்கு சாஹு, “இனி இந்த பெண்ணுடன் எந்தத் தொடர்பும் வேண்டாம்” என்று வெளிப்படையாக அறிவித்தார்.
கிராம மூத்தோர் மற்றும் மக்கள் முன்னிலையில், ஊர்மிளாவை அவளது காதலன் அவினாஷ் குமார் உடன் உடனடியாக திருமணம் செய்து வைக்க தீர்மானிக்கப்பட்டது. பஞ்சாயத்து தீர்ப்பின் பேரில், அவினாஷ் ஊர்மிளாவின் நெச்சியில் குங்குமம் வைத்தார். கிராம மக்கள் முன்னிலையில் திருமணம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின், இருவரும் ஒன்றாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த வினோத தீர்ப்பு கும்லா மாவட்டத்தை மட்டுமல்லாமல், ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. சமூக வலைதளங்களில் “கணவரின் முடிவு சரியா, தவறா?” என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது. சிலர், இது பெண்ணின் விருப்பத்தை மதித்த நல்ல முடிவு என்று பாராட்ட, சிலர், குடும்பம் சிதைவடைந்தது தவறு என்று விமர்சித்து வருகின்றனர்.
Read more: சொந்த ராசிக்குள் நுழையும் சுக்கிரன்.. கட்டு கட்டாக பணத்தை அள்ளப் போகும் 3 ராசிகள்.. திடீர் ராஜயோகம்!