மனிதாபிமான சட்டங்களை மீறும் இஸ்ரேலின் நடவடிக்கைகளால், காசாவை சூழ்ந்துள்ள பசிப்பிணி, மனதை ரணமாக்கும் விதமாக பிறந்த ஒருவாரமே ஆன குழந்தை பட்டினியால் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளின் அழுகுரல்கள், ஓயாமல் ஒலிக்கும் பசிக்குரல்கள், ஒரு தாய்க்கு ஒரு துண்டு ரொட்டி கிடைத்தால், அதை குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுத்து, மீதமுள்ளதை அடுத்த நாளைக்கு சேமித்து வைத்துக்கொள்ளும் நிலை. காசாவில் நிலவும் பசிப்பிணியின் கொடுமை காட்சிகளை பார்க்கும்போது மனதை ரணமாக்குகிறது. ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களால், கடந்த மூன்று மாதங்களாக உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.
குழந்தைகள் கடுமையான பசியில் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காசாவின் வடக்கு பகுதியில் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 16% பேர் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது மருத்துவமனைகளில் குறைந்த எடை கொண்ட குழந்தைகள் மற்றும் பசிப்பிணியில் சிக்கிய குழந்தைகள் அதிகரித்து வருகின்றன.
இஸ்ரேலின் தடைகள் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள், உதவித் திட்டங்களை செயல்படுத்துவதில் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன. இதனால், மக்கள் தினசரி உணவுப் பொருட்கள், குறிப்பாக மாவு மற்றும் பிற அடிப்படை தேவைகளுக்காக போராடுகின்றனர். உணவை கட்டுப்படுத்தி மக்கள் மீது அழுத்தம் செலுத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் பட்டினியின் கொடுமையை மேலும் மோசமாக்குகின்றன.
இந்தநிலையில், காசா நகரத்தின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் பட்டினியால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகவும், அதில் பிறந்து 35 நாள் குழந்தை ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்ததாக இயக்குனர் முஹம்மது அபு சல்மியா அல் ஜசீராவிடம் தெரிவித்தார். நேற்று பட்டினியால் இறந்த இரண்டு பேரில் பிறந்த ஒருவாரமே ஆன குழந்தையும் ஒன்று என்று கூறப்படுகிறது.
காசாவின் சுகாதார அமைச்சகம் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுகள் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில், பட்டினியால் பாதிக்கப்பட்ட மக்களால் நிரம்பி வழிவதாக கூறியிருந்தது. அந்தவகையில், காசாவில் 17,000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், நேற்று உணவுத்தேடி அலைந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் காலை முதல் 116 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில் 38 பேர் அமெரிக்க ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நடத்தும் உதவித் தளங்களில் இருந்து உணவு தேடிச் சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸுக்கு தென்மேற்கே உள்ள ஒரு இடத்திற்கும், ரஃபாவின் வடமேற்கே உள்ள மற்றொரு மையத்திற்கும் அருகில் இந்த இறப்புகள் நிகழ்ந்ததாகவும், இந்த இறப்புகள் “இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டினால்” ஏற்பட்டதாகவும் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல் தெரிவித்தார்.
சந்தைகளிலோ அல்லது விநியோக நிலையங்களிலோ அடிப்படைப் பொருட்கள் கிடைக்கவில்லை, அதே நேரத்தில் மாவு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, 2.3 மில்லியன் மக்கள் தங்கள் அன்றாட ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Readmore: புதிதாக பிறந்த குழந்தைகளின் மனதில் என்ன நடக்கும்?. மூளையில் நொடிக்கு நொடி நிகழும் அதிசயம்!.