தொழில், அரசு மற்றும் சமூக தளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தலைமையிலான மாற்றங்கள் உலகம் முழுவதும் வேகமெடுத்து வரும் நிலையில், உலகளாவிய AI Vibrancy Index பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது.. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளது.
இந்த அறிக்கை, AI துறையில் உலகளவில் கடும் போட்டி நிலவுகிறது என்பதையும், அந்தப் போட்டியில் இந்தியா முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் மூன்றாவது இடம், உலக AI பந்தயத்தில் நாட்டின் வளர்ந்து வரும் பங்கைக் காட்டும் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஆய்வின் மதிப்பெண்கள் :
அமெரிக்கா – 78.6
சீனா – 36.95
இந்தியா – 21.59
அமெரிக்கா மற்றும் சீனா இன்னும் முன்னிலையில் இருந்தாலும், இந்தியா தென் கொரியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பல முன்னேறிய நாடுகளை விட மேலான இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் இந்த முன்னேற்றத்திற்கு, வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறை, திறமையான மனித வளத்தின் பெரிய களஞ்சியம் முக்கிய காரணங்களாக உள்ளன என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஸ்டான்ஃபோர்ட் AI Vibrancy Tool என்பது ஒரு நாட்டின் AI சூழலமைப்பின் மொத்த வலிமையை அளவிடும் கருவியாகும்.
இதில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறமையான பணியாளர்கள், முதலீடு, பொருளாதார தாக்கம், உட்கட்டமைப்பு, பொதுமக்களின் கருத்து, அரசின் கொள்கைகள் போன்ற பல அம்சங்கள் கணக்கில் எடுக்கப்படுகின்றன. இந்த கருவி மூலம், AI புதுமைகள் எங்கு உருவாகின்றன, திறமைகள் எவ்வாறு வளர்கின்றன, அரசுகள் எந்த அளவுக்கு ஆதரவு வழங்குகின்றன என்பதைக் கண்டறிய முடிகிறது. இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, விசுவல் கேபிடலிஸ்ட் (Visual Capitalist) நிறுவனம் இந்த தரவரிசைகளை காட்சிப்படுத்தியுள்ளது. எனவே, இந்த ஆய்வு உலக AI துறையில் இந்தியாவின் உயர்ந்து வரும் முக்கியத்துவத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது.
இந்தியாவிற்கு இந்த தரவரிசை ஏன் முக்கியம்?
உலகளாவிய AI Vibrancy Index-ல் இந்தியா 3-வது இடம் பெற்றிருப்பது, இந்தியாவிற்கு பெரிய ஊக்கமாக கருதப்படுகிறது. இந்த தரவரிசை, AI துறையில் அதிகரித்து வரும் முதலீடுகள், வேகமாக வளர்ந்து வரும் ஆராய்ச்சி செயல்பாடுகள், உறுதியான ஸ்டார்ட்அப் சூழல், பெரும் எண்ணிக்கையிலான பொறியாளர்கள் மற்றும் மென்பொருள் உருவாக்குநர்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.
அதேபோல், அரசும் தனியார் துறையும் செயற்கை நுண்ணறிவிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவது, உலகளவில் இந்தியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தி வருகிறது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட கவலைகள்
இந்த முன்னேற்றத்துடன் சேர்ந்து, ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் அறிக்கை முன்வைக்கிறது. AI-யின் பயன்கள் சமமாகப் பகிரப்படாவிட்டால், உலகளவில் பொருளாதார வேறுபாடு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என அது கூறுகிறது.
சில நாடுகள் வேகமாக முன்னேறக்கூடும்; அதே நேரத்தில், மற்ற நாடுகள் பின்தங்கும் நிலை உருவாகலாம். ஆகவே, AI வளர்ச்சி அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும், எதிர்கால முன்னேற்றங்களில் எந்த நாடும் புறக்கணிக்கப்படக் கூடாது என்றும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
Read More : மாதம் ரூ. 3,000 முதலீடு செய்தால், ரூ. 20 லட்சம் பெறலாம்.! இது இந்தியாவின் சிறந்த சேமிப்புத் திட்டம்..!



