இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்களும் மொழிகளும் ஒன்றிணைந்த ஒரு நாடாகும். அதனால் தான் இங்கு மாநில வாரியாக உண்ணும் உணவு உடுத்தும் உடை, பேசும் மொழி என அனைத்திலும் வேறுப்பாடு இருப்பதை காணலாம். அதேபோல திருமணத்தின் போதும் மதம் மற்றும் சாதியின் அடையாளத்தை காட்டும் பல்வேறு பழக்கவழக்கங்களும் சடங்குகளும் இடம் பெற்றிருக்கும்.
அந்த வகையில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டத்தின் திருமண மரபுகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாகியுள்ளது. மணமகள் கழுத்தில் தாலி கட்டியவுடன், மணமகனின் குடும்பத்தினர் அவரை கருப்பு சாட்டையால் மூன்று முறை அடிக்க வேண்டும் என்பதே அந்த மரபு. இந்த சடங்கு நடந்தால்தான் திருமணம் முழுமையானதாக கருதப்படுகிறது.
நூற்றாண்டுகளுக்கு முன்பு, புச்சுபல்லே குலத்தினர் கங்கம்மா கோவிலில் இருந்த ஒரு பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் 5 கருப்பு சாட்டைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதை தெய்வத்துக்கு அவமரியாதை செய்ததாகக் கருதிய அவர்கள் மன்னிப்பு கேட்டனர். அப்போது கங்கம்மா கனவில் தோன்றி, “உங்கள் குலத்தில் திருமணத்தின்போது மணமகனை கருப்பு சாட்டையால் மூன்று முறை அடிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டதாக நம்பப்படுகிறது.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, அந்தக் குலத்தில் திருமணத்தின் போது மாப்பிள்ளையை சாட்டையால் அடிக்கும் வழக்கம் தலைமுறை தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பத்திரம்பள்ளி, தொண்டூர், இனங்களூர், லோமட, போடிவாரிப்பள்ளே, மல்லேலா, அகதூர், சந்த கோவூர் போன்ற கிராமங்களில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ்வழக்கை கடைபிடித்து வருகின்றன.
சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில், மணமகனை சாட்டையால் அடிக்கும் காட்சி வீடியோவாகப் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால், “இது பழங்கால வழக்கமா? இல்லையெனில் தேவையற்ற சடங்கா?” என்ற விவாதம் எழுந்துள்ளது.
Read more: “2040-ல் இல்லாத ஒன்ன, இருக்குன்னு சொல்லும் ஹீரோ..” கவனம் ஈர்த்த பிரதீப் ரங்கநாதனின் LIK டீசர்..