ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பெண்ணை கண நொடியில் காப்பாற்றிய ஊழியருக்கு பாராட்டுக்கள் குவித்து வருகின்றது.
உத்தரபிரதேச மாநிலத்தில் அமேதி ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நடைமேடைக்கு ரயில் வந்து நின்றுள்ளது. பின்னர் புறப்பட்டவுடன் அந்த ரயிலில் ஏற வந்த பெண் கடைசி படிக்கட்டில் கால்வைத்தபோது ஸ்லிப் ஆகி கீழே விழுந்தார். ஓடிக் கொண்டிருந்த ரயிலுக்கும் நடை மேடைக்கும் இடையே சிக்கிக் கொள்ளும்தருவாயில் இருந்தபோது, இதை கவனித்த டிக்கெட் சோதனை செய்யும் அதிகாரி அடுத்த கணமே ஓடி வந்து அவரை பிடித்து இழுத்து காப்பாற்றினார். ஒரு நொடி தாமதித்திருந்தால் கூட உயிருக்கே உலை வைத்திருக்கும். இந்த காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
16 நொடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவை வெளியான அடுத்த நொடியில் இருந்து இதுவரை 40000 பேர் பார்த்துள்ளனர். கணநொடியில் அந்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய அந்த டிக்கெட் பரிசோதகருக்கு அரசு சன்மானம் வழங்க வேண்டும் என்று டுவிட்டரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
’’சல்யூட் ஹீரோ’’ ’’ கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’’ என பதிவுகள் அவரை பாராட்டி வந்த வண்ணம் உள்ளது. அதே வேளையில் இதே சி.சி.டி.வி. காட்சியில் பரிசோதகர் தன் உயிரை கொடுத்து அந்த பெண்ணை காப்பாற்றிக் கொண்டிருந்தபோது இதை எதுவுமே கண்டும் காணாமல் ஒரு இளைஞர் வேகமாக ஓடி சம்பம் நடந்த அந்த இடத்தைக் கடந்து ஓடிச் சென்று வண்டியில் ஏறும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
ஒருபுறம் மனிதநேயம் மறித்துப் போகவில்லை என்றாலும், மற்றொரு வழியில் மனித நேயம் மறித்துவிட்டு அதன்போக்கில் சுயநலமாக இருப்பது சற்று வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. அவர் நினைத்திருந்தால் கூடவே உதவி செய்துவிட்டு அடுத்த ரயிலில் சென்றிருக்க முடியும்.!!