சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது..
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக ஐவர் குழுவை காங்கிரஸ் அமைத்தது.. இதனால் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. எனினும் இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிக தொகுதிகளை வழங்காத பட்சத்தில் காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது..
குறிப்பாக காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.. மேலும் தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.. மாணிக்கம் தாகூர் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் இல்லை எனில் திமுக வெற்றி பெற்றிருக்காது என்ற ரீதியில் கருத்து தெரிவித்தார்.. இதற்கு திமுகவினர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. தொடர்ந்து மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை வலியுறுத்தி கருத்துகளை பதிவிட்டு வந்தார். எனினும், சமீபத்தில் சென்னை வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்..
ஆனால் தமிழகத்தை பொறுத்த வரை ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.. மேலும் திமுகவும், காங்கிரஸும் இணைந்து தான் தேர்தலை சந்திக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.. மேலும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தற்போது எழவே இல்லை.. அது சரிவராது என்பது எங்களுக்கும் தெரியும் காங்கிரஸ் கட்சிக்கும் தெரியும் எனவும் தெரிவித்தார்.. முதல்வரின் இந்த கருத்தால் திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது..
இந்த நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் இல்லை என்று திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் “ அதிமுகவினர் தங்கள் கூட்டணியை சரியாக வைத்துக் கொண்டாலே போதும்.. மற்ற கட்சிகளின் கூட்டணி குறித்து அதிமுகவினர் என் கவலைப்படுகின்றனர் என எனக்கு தெரியவில்லை.. திமுக – காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக நிலைத்திருக்கும் கூட்டணி.. அதில் எந்த மாற்றமும் வர வாய்ப்பில்லை..” என்று தெரிவித்தார்.



