பொதுவாக வாழ்நாளில் ஒவ்வொரு பெண்களுக்கும் பருவமடைவது என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் 11 – 13 வயதிலிருந்து பருவமடைந்து மாதவிடாய் ஏற்படுகிறது. இது இயற்கையாகவே பெண்ணாக பிறந்த அனைவருக்கும் ஏற்படும் சாதாரண நிகழ்வு தான்.
தற்போதுள்ள நவீன வாழ்க்கைமுறையால் பெண் குழந்தைகள் 10 வயதிற்கும் குறைவாகவே இருப்பவர்கள் பருவமடைந்து விடுகின்றனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் மருத்துவ முறைப்படி இதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இவ்வாறு சிறு வயதிலேயே பருவம் அடைந்து விடுவதால் குழந்தைகளாக இருக்கும்போதே மனதளவிலும், உடலளவிலும் பல பாதிப்புகளை சந்திக்கின்றனர்.
பொதுவாக ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் உணவுகளில் பல ஊட்டச்சத்தான பொருட்களை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். முதன் முதலில் பெண் குழந்தைகள் பருவமடையும் போது எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்தான உணவு தான் வயதான காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.
குறிப்பாக பருவமடைய போகும் அறிகுறிகளுடன் இருக்கும் பெண்களுக்கு நல்லெண்ணெய், பூவம் வாழைப்பழம், எள்ளு போன்றவை சம அளவில் கலந்து தினமும் காலையில் கொடுத்து வர வேண்டும். இந்த ஊட்டச்சத்தான கலவையை பெண் குழந்தைகளுக்கு 10 வயதில் ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நேரத்தில் சாப்பிட்டு வரலாம். இவ்வாறு சாப்பிடும் போது கர்ப்பப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியேறி கர்ப்பப்பை வலுவடையும். இடுப்பு எலும்புகள் வலுவாகும். மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலி குறையும்.