அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்திற்குள் விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை கொண்டாடி, மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வீடியோவை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ஆக பதிவிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிலையங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட அரசியல் சார்ந்த நிகழ்வுகளை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை கடுமையான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்துள்ளது. இந்த நடைமுறையை மீறி, தேனி மாவட்டம் பெரியகுளம் வைகை அணைச் சாலையில் இயங்கி வரும் புத்தர் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளைஞர்கள் சிலர் தங்கள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் நிகழ்வை நடத்தியுள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அவர்கள், அதனை வீடியோவாகப் பதிவு செய்து பின்னணி இசையுடன் சமூக வலைதளங்களில் ரீல்ஸாக பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வேகமாகப் பரவி பல்வேறு தரப்பினரிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.
பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் மத்தியில் அரசியல் சார்ந்த விஷயங்களைப் புகுத்துவது அவர்களது கல்விச் சூழலையும் மனநிலையையும் பாதிக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அரசு வழிகாட்டுதல்களை மீறி பள்ளி வளாகத்திற்குள் அரசியல் நிகழ்வை நடத்த அனுமதித்த தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீதும், இதில் ஈடுபட்ட நபர்கள் மீதும் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் பெற்றோர்களும் பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More : இந்த 2 அமைச்சர்களிடம் கொஞ்சம் கவனமா இருங்க..!! முதல்வர் விஜயை எச்சரிக்கும் டெல்லி..!!



