தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 2 முக்கிய அமைச்சர்களின் செயல்பாடுகள், முதல்வர் விஜய்க்கு அரசியல் ரீதியாக புதிய தலைவலியை ஏற்படுத்தக்கூடும் என்ற பேச்சு டெல்லி அரசியல் வட்டாரங்களில் தீவிரமடைந்துள்ளது. இதில் ஒரு அமைச்சர் மீது தொடக்கத்திலேயே ஊழல் புகார்கள் எழ தொடங்கியுள்ள நிலையில், மற்றொரு அமைச்சர் மத்திய அரசையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் தொடர்ந்து காட்டமாக விமர்சித்து வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள குறிப்பிட்ட அந்த அமைச்சர் குறித்து, டெல்லி தலைவர்கள் பலருக்கும் ஏற்கெனவே நன்கு தெரியும் என கூறப்படுகிறது. அண்மையில் முதலமைச்சர் விஜயை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், அந்த அமைச்சரின் செயல்பாடுகள் குறித்து எச்சரித்து, அவரிடம் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்றொரு புறம், மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையிலான உறவை சீர்குலைக்கும் வகையில் இரண்டாவது அமைச்சர் பேசி வருவது உளவுத்துறையின் கவனத்திற்குச் சென்றுள்ளது. நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், பிரிவினையைத் தூண்டும் விதமாகவும் அவரது கருத்துகள் அமைந்துள்ளதாக உளவுத்துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டு, இரு அமைச்சர்களின் நகர்வுகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் நிதி சார்ந்த தேவைகளுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னரே தெளிவுபடுத்தியிருந்த சூழலில், இத்தகைய சர்ச்சைக்குரிய பேச்சுகள் தேவையின்றி முரண்பாடுகளை உருவாக்குவதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன.
Read More : அலர்ட்!. வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!. மீனவர்களுக்கு எச்சரிக்கை!



