கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவேட்களம், சிதம்பரம் நடராஜர் தலத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பாடல் பெற்ற தலமாகக் கருதப்படுகிறது. இங்கு அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாசுபதேஸ்வரர் கோயில், பல்லவ மன்னர்களால் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மிகப் பழமையான சிவாலயமாகும். சாஸ்திர விதிகளின்படி அமைக்கப்பட்ட இந்த கோயில், தமிழகத்தின் தொன்மையான கோயில் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இந்த கோயிலின் மூலவர் பாசுபதேஸ்வரர் என்றும், தாயார் சத்குணாம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றனர். மகாபாரதக் கதையுடன் தொடர்புடைய இந்த தலம், அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெறுவதற்காக சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடமாகவும் கருதப்படுகிறது. சிவபெருமானும் அர்ஜுனனும் இங்கு நேருக்கு நேர் சந்தித்து போரிட்டதாகவும், அந்த நிகழ்வின் சின்னமாக மூலவரின் சிலையில் தழும்பு போன்ற அடையாளம் காணப்படுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.
இங்கு உள்ள முருகப்பெருமான் வள்ளி மற்றும் தெய்வானையுடன் தனித்துவமான வடிவில் காட்சியளிக்கிறார். திருமணம் ஆகாதவர்கள் இந்த தலத்தில் வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் எனவும், பேசுவதில் சிரமம் உள்ள குழந்தைகளுக்கு இங்கு வழங்கப்படும் பிரசாதம் உதவும் எனவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த கோயிலின் தனிச்சிறப்பாக சூரியன் மற்றும் சந்திரன் அருகருகே அமைந்த வடிவமைப்பு காணப்படுகிறது. சூரிய–சந்திர கிரகண காலங்களில் இங்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. அந்நேரத்தில் வழிபட்டால் வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி நன்மை கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
இந்த கோயில் தினமும் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையும் திறந்திருக்கும். வைகாசி விசாகம், ஆணி திருமஞ்சனம், மகா சிவராத்திரி போன்ற விழாக்காலங்களில் பெரும் பக்தர்கள் கூட்டம் திரண்டு வழிபடுவது குறிப்பிடத்தக்கது.



