தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டாளர்களுக்கு சுங்கச்சாவடிகளில் மாதாந்தர, வருடாந்தர பாஸ் பற்றிய தகவலை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் மாதாந்தர, வருடாந்தர பாஸ் கிடைப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வெளிப்படை தன்மையை உருவாக்க இது பற்றிய விவரங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் காட்சிப்படுத்துமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதன் கள அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளது. இந்த பாஸ்களுக்கான கட்டணம் மற்றும் நடைமுறைகளில் சாலை பயன்பாட்டாளர்கள் அறிந்துகொள்வதை உறுதிசெய்வது இதன் நோக்கமாகும்.
சுங்கச்சாவடியை வாகனங்கள் அணுகும் இடங்கள், வாடிக்கையாளர் சேவைப்பகுதிகள், வாகனங்கள் உள்நுழைதல் மற்றும் வெளியேறும் இடங்கள் போன்றவற்றில் இதற்கான தகவல் பலகைகள் பொருத்தப்பட வேண்டும். இவை ஆங்கிலம், இந்தி, மாநில மொழிகள் ஆகியவற்றில் இருக்க வேண்டும் 30 நாட்களுக்குள் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இத்தகைய தகவல் பலகைகளை காட்சிப்படுத்த கள அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ள ஆணையம், இரவு, பகல் என எந்நேரத்திலும் தெளிவாக தெரியும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. மேலும் விரிவான தகவல்களை ராஜ்மார்க் செல்பேசி செயலி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.



