அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற தனது புதிய முயற்சிகள், அமெரிக்கா – டென்மார்க் மற்றும் பிற நாட்டு நாட்டு (NATO) கூட்டாளிகளுடன் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்த நிலையில், இதுபற்றி ரஷ்யாவுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை இரவு ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையில் பேசிய புடின், இந்த விவகாரத்திலிருந்து ரஷ்யா விலகி நிற்பதாக தெளிவுபடுத்தினார். கிரீன்லாந்தின் எதிர்காலம் ரஷ்யாவின் கவலைக்குரிய விஷயம் அல்ல என்றும், சம்பந்தப்பட்ட நாடுகள் தங்களுக்குள் இதைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயம்தான் என்றும் அவர் கூறினார்.
மேலும் “கிரீன்லாந்துக்கு என்ன நடக்கிறது என்பது எங்களுடைய விஷயம் அல்ல. உண்மையில், டென்மார்க் எப்போதும் கிரீன்லாந்தை ஒரு காலனியாகவே நடத்தி வந்துள்ளது. சில சமயங்களில் கடுமையாகவும், கொடூரமாகவும் கூட நடந்துள்ளது. ஆனால் அது வேறு விஷயம். இப்போது யாருக்கும் அதில் ஆர்வம் இருக்காது என்று நினைக்கிறேன்.
இது நிச்சயமாக எங்களைச் சார்ந்தது அல்ல. அவர்கள் தங்களுக்குள் இதைத் தீர்த்துக் கொள்வார்கள். 1917 ஆம் ஆண்டு டென்மார்க் தனது வர்ஜின் தீவுகளை (Virgin Islands) அமெரிக்காவுக்கு விற்றது.. அதேபோல், 1867 ஆம் ஆண்டு ரஷ்யா அலாஸ்காவை அமெரிக்காவுக்கு 7.2 மில்லியன் டாலர்களுக்கு விற்றது..” என்று புடின் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து அவசியம் – ட்ரம்ப்
இதனிடையே, உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) டாவோஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவ பலத்தைப் பயன்படுத்தும் தனது முந்தைய மிரட்டலிலிருந்து பின்னடைவதாக தெரிவித்தார். இருப்பினும், அந்த டேனிஷ் பிரதேசம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நான் கிரீன்லாந்தை முழுமையாக, உரிமை, தலைப்பு, சொந்தமாக பெற விரும்புகிறேன். ஆனால் அதை பெற ராணுவ பலத்தைப் பயன்படுத்த மாட்டேன். அதே நேரத்தில், ஐரோப்பிய கூட்டாளிகளை அவர் கிண்டல் செய்தார் மற்றும் அமெரிக்காவின் விரிவாக்க முயற்சிகளை NATO தடுக்கக் கூடாது..” என்றும் தெரிவித்தார்.
டாவோஸில் பேசிய அவர், “நான் கேட்கும் நிலப்பரப்பு மிகவும் குளிர்ந்ததும், சரியாக அமைந்திடாத இடத்திலும்தான் இருக்கிறது,” என்று கூறினார்.
மேலும், இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா ஐரோப்பாவை காப்பாற்றியதாகவும், NATO குறித்து, “பல தசாப்தங்களாக நாங்கள் அவர்களுக்கு கொடுத்ததை ஒப்பிட்டால், இது மிகவும் சிறிய கோரிக்கையே,” என்றும் அவர் தெரிவித்தார்.
“அதிகப்படியான பலத்தையும் சக்தியையும் பயன்படுத்த நான் முடிவு செய்தால்தான் நமக்கு ஏதாவது கிடைக்கும். அப்போது நாங்கள் உண்மையில் தடுக்க முடியாதவர்களாக இருப்போம். ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன், சரியா?” என்று ட்ரம்ப் கூறினார். பின்னர், “நான் செய்ய வேண்டியதில்லை” என்றும் “நான் பலத்தை பயன்படுத்த விரும்பவில்லை” என்றும் அவர் சேர்த்துக் கூறினார்.
குடிமக்கள் தயாராக இருக்க வேண்டும் – கிரீன்லாந்து அரசு
இதையடுத்து, கிரீன்லாந்து அரசு தனது குடிமக்களை “தயாராக இருக்க” கேட்டுக் கொண்டுள்ளது. அவசர நிலை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வகையில், ஆங்கிலம் மற்றும் கிரீன்லாந்து மொழிகளில் ஒரு வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில், மக்கள் குறைந்தது ஐந்து நாட்கள் தங்களைத் தாங்களே சமாளிக்க போதுமான உணவு, தண்ணீர், எரிபொருள் மற்றும் பிற தேவையான பொருட்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“நாங்கள் இப்போதுதான் கடைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கினோம்,” என்று கிரீன்லாந்தின் தலைநகர் நூக்கில் வசிக்கும் டோனி யாகப்சன் தெரிவித்தார். அவர் வாங்கிய பைகளில் மெழுகுவர்த்தி, சிற்றுண்டிகள், கழிப்பறை காகிதம் (toilet paper) போன்றவை இருந்தன.
ட்ரம்பின் கிரீன்லாந்து குறித்த பேச்சு “வெறும் மிரட்டல்கள்தான்” என்று தான் நினைப்பதாக யாகப்சன் கூறினார். “ஆனால் தயாராக இருப்பது, தயாராக இல்லாமல் இருப்பதை விட நல்லது,” என்றும் அவர் தெரிவித்தார்.



