சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே திண்டமங்கலத்தானூரைச் சேர்ந்தவர் அர்ஜுனன். இவர் தனது மூத்த மகன் பிரகாஷுக்கு பெண் பார்த்து திருமணம் செய்ய முயற்சி செய்து வந்தார். அந்த நேரத்தில் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த குமார் மற்றும் மணி இருவரும், அர்ஜுனனுடன் பழகி, “மணமகன் பிரகாஷுக்கு நல்ல வரன் தேடித் தருகிறேன்” என நம்பிக்கை அளித்தனர்.
அதன்படி பெண் பார்ப்பதாக கூறி அர்ஜுனன் மற்றும் அவரது மகன் பிரகாஷை திண்டல் முருகன் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பெண் புரோக்கர் வள்ளி, பிரியதர்ஷினி என்ற இளம்பெண்ணை அழைத்து வந்தார். பிரியதர்ஷினியை பார்த்த பிரகாஷ் உடனே விருப்பம் தெரிவித்ததால், இரு தரப்பினரும் உடனடியாக திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
இதற்காக, புரோக்கர் கமிஷன் ரூ.1.80 லட்சம் பணத்தை அர்ஜுனன் தரப்பில் இருந்து குமார் மற்றும் மணி பெற்றுக்கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு பிரியதர்ஷினியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பிரகாஷ் பிரிய தர்ஷினியிடம் கேட்டபோது, “தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருக்கிறது. ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது” என வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் குடும்பம் உடனே ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மணி, குமார், வள்ளி, பிரியதர்ஷினி உள்ளிட்ட 7 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், பிரியதர்ஷினி, “பணத்திற்காகவே இரண்டாவது திருமணத்தை செய்தேன்” என்று ஒப்புக்கொண்டார்.
இதில், பிரியதர்ஷினி உட்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். மேலும், இந்த மோசடி கும்பல் பல ஆண்டுகளாகவே திருமண மோசடியில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது.