ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் நாடுகள் மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் சட்டம் இயற்றியுள்ளது. இந்த நடவடிக்கை இருதரப்பு உறவுகளையும், உலகளாவிய எரிசக்தி சந்தையையும் கடுமையாகப் பாதிக்கும் என்று இந்தியா எச்சரித்துள்ளது.
அமெரிக்க காங்கிரஸில் ‘ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைச் சட்டம்’ (Sanctioning Russia and Iran Act) நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. தனது 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதும், நாட்டின் வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதுமே உடனடி முன்னுரிமை என இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
சமீபகாலமாக இந்தியா மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே இது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இந்தத் தடையால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் மட்டுமின்றி, சர்வதேச எரிசக்தி சந்தையிலும் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து அமெரிக்க மூத்த அதிகாரிகளிடம் இந்தியா ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளது.
உக்ரைன் போரை முன்னிட்டு ரஷ்யா மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 262-159 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. செனட் சபையிலும் ஒப்புதல் பெற்ற இந்த மசோதா, தற்பொழுது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி, ரஷ்யாவிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவைத் தொடர்ந்து வாங்கும் நாடுகள் மீது 100% வரை இறக்குமதி வரிகளை (Tariffs) விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. ரஷ்ய எரிபொருளை அதிகளவில் வாங்கும் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 3-வது இடத்தில் இருக்கும் இந்தியா, சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளது. எனவே, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியாவின் எரிசக்திக் கொள்கையிலும், வாஷிங்டனுடனான வர்த்தக உறவிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், அமெரிக்க நாடாளுமன்றத்திலேயே இந்த மசோதாவுக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. வெளியுறவு விவகாரக் குழுவின் முன்னணி ஜனநாயகக் கட்சி உறுப்பினர் கிரிகோரி மீக்ஸ், இந்த மசோதாவில் குறைபாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஷ்ய அதிபர் மாளிகையின் (Kremlin) செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இத்தகைய கூடுதல் தடைகள் உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையை மேலும் சிக்கலாக்கும் எனக் விமர்சித்துள்ளார்.



