பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் (Kohat) மாவட்டத்தில் உள்ள பழைய போலீஸ் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள மசூதியில், வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையின் போது தற்கொலை படை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் தொழுகையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்; பலரும் படுகாயமடைந்தனர்.
வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனத்தை மசூதி மற்றும் காவல் வளாகத்தின் கதவு மீது தற்கொலைப்படை பயங்கரவாதி மோதி வெடிக்கச் செய்துள்ளான். அதன் தொடர்ச்சியாக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ‘Rescue 1122’ மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், கடந்த ஆண்டு உருவான ‘இத்தேஹாத்-உல்-முஜாஹிதீன் பாகிஸ்தான்’ (IMP) என்ற புதிய பயங்கரவாத அமைப்பு அல்லது தஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கைபர் பக்துன்க்வா பகுதி நீண்டகாலமாகவே பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கும் TTP உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையிலான மோதலால் பதற்றமான சூழலிலேயே இருந்து வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், இதே மாகாணத்தில் நடத்தப்பட்ட உளவுத்துறை சார்ந்த நடவடிக்கைகளில் TTP அமைப்பைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக்கொன்றதாக அறிவித்திருந்தது.



