கடந்த 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற 17வது சட்டசபை தேர்தலில், சுமார் 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்த முறை வாக்குப்பதிவு அதிகரித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள், 62 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 240 அறைகள், 3,324 மேஜைகள் மற்றும் 10,545 பணியாளர்கள் மூலம் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகளை கணக்கிடுவதற்காக, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் தனித்தனி மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் மொத்தம் 4.61 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 2.88 லட்சம் வாக்குகள் தேர்தல் பணியாளர்களிடமிருந்தும், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மூலம் 1.73 லட்சம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. மேலும், 1.10 லட்சம் அரசு அலுவலர்கள் நேரடியாக வாக்களித்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில், 19 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதேவேளையில், 4 தொகுதிகளில் அதிமுகவும், 3 இடங்களில் தவெகவும், முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்ப தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தேர்தல் முடிவுகளுக்கான ஆரம்ப சிக்னலாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக தபால் வாக்குகளில் அரசு ஊழியர்கள் ஆதரவு காரணமாக திமுக முன்னிலை வகித்து வந்தது. ஆனால் இந்த முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டிருந்ததால், அவர்களின் ஆதரவு எந்த கட்சிக்கு என்பதை அறிய ஆர்வம் அதிகரித்துள்ளது.
அடுத்த கட்டமாக காலை 8.30 மணி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதன்பின் வரும் முன்னிலை நிலவரங்கள் மூலம் தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெளிவாகத் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: ரிசல்ட் டே.. காலையிலே திருப்பதிக்கு சென்ற த்ரிஷா.. இன்ஸ்டா போஸ்ட் வைரல்..!



