கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் இன்று தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
நாளை, கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 98.6 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 முதல் 78.8 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக் கடல், வட தமிழக கடலோரப் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், தெற்கு வங்கக் கடல் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், தென்மேற்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு அரபிக் கடலின் சில பகுதிகள், தென்கிழக்கு–மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கொங்கன்-கோவா-கர்நாடகா-கேரள கடலோரப் பகுதிகள், லட்சதீவு, மாலத்தீவு பகுதிகளில் இன்று அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More: குட்நியூஸ்!. சமையல் எண்ணெய் விலையை குறைக்க உத்தரவு!. மத்திய உணவுத் துறை அதிரடி!