சிவ பெருமானின் ருத்ர வடிவமான பைரவர் கால பைரவர், ஆதி பைரவர், சொர்ண பைரவர், உக்கிர பைரவர், சொர்ண ஆகர்ஷன பைரவர் உள்ளிட்ட பல வடிவங்களில், பல பெயர்களில் பல கோவில்களில் அருள் செய்து வருகிறார். நாய், பைரவரின் வாகனம் என்பதால் நாயை பைரவரின் அம்சமாக கருதி வழிபடும் வழக்கமும் பல தலங்களில் வழக்கமாக இருந்து வருகிறது.
பைரவர், சனியின் குருவாகவும், பன்னிரெண்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள், காலம் ஆகியவற்றை கட்டுப்படுத்துபவராக சொல்லப்படுகிறது. மொத்தம் 64 பைரவ ரூபங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பைரவரை எப்படி வழிபட்டால், என்ன பலன் கிடைக்கும், என்ன செய்தால் அவரின் அருளை முழுவதுமாக பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சிவபெருமானுடைய 64 வடிவங்களில் ஒருவராக விளங்கும் பைரவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கிறார். எனவே இவருக்கு ஐந்து தீபங்கள் வைத்து விளக்கேற்றி வழிபடும் பொழுது, காலத்தால் தீர்க்க முடியாத எத்தகைய பிரச்சனையையும் அவர் தீர்த்து வைப்பார் என்பது நம்பிக்கை. சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்குத்தான். காவல் தெய்வமாக விளங்கும் பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி மிக உகந்த நாளாகும்.
ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் அனைத்து நாட்களும் பைரவரை வழிபட உகந்த நாட்கள் ஆகும். இருந்தாலும், தேய்பிறை மற்றும் வளர்பிறை நாட்களில் வரும் அஷ்டமி திதி பைரவரை வணங்குவதற்கு மிக விசேஷமான நாட்களாக சொல்லப்படுகிறது.
அந்தவகையில் இன்று (ஆகஸ்ட் 16) ஆடி மாத தேய்பிறை அஷ்டமி திதி நாளாகும். ஆடி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று விரதம் இருந்து பைரவரை வழிபட ஒரு சிறந்த நாளாகும். இன்றைய தினம் ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி என்பதால், அந்நாளில் விரதம் இருந்து பைரவரை வழிபடுங்கள். மேலும் அருகில் இருக்கும் பைரவர் கோயில் அல்லது சிவன் கோயிலுக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பியுங்கள். நைவேத்தியமாக செவ்வாழை கொடுங்கள். மேலும், தேங்காயை இரண்டாக உடைத்து அதில் நெய் அல்லது விளக்கினை ஊற்றி, அதில் திரி போட்டு தீபம் ஏற்றி பைரவருக்கு உரிய மந்திரங்களை சொல்லி பைரவரை வழிபடுங்கள்.இந்நாள் முழுவதும் இறைவழிப்பாட்டில் ஈடுபடுங்கள். சுப காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது.
ஆடி தேய்பிறை அஷ்டமி நாளில் விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் தீராத பண கஷ்டங்களும் தீரும், தொழில் வியாபாரங்களில் எதிரிகள் தொல்லை ஒழியும், நிதி வருமானம் பெருகும், துரதிஷ்ட சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். ஏவல், செய்வினை போன்றவை பழிக்காமல் போகும், கொடிய நோய்கள் குணமாகும். ஆடி தேய்பிறை அஷ்டமி அன்று கால பைரவருக்கு விளக்கேற்றி வழிபட்டால் நாள் பட்ட நோய்கள் மற்றும் கடன் பிரச்சினைகள் போன்றவை தீரும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி ஜாதகத்தில் சனி தோஷம் இருப்பவர்கள் பைரவருக்கு விளக்கேற்றி வழிபட்டால் தோஷம் நீங்கும்.
காலபைரவர் பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்வதால் இவருக்கு கோவிலில் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி, பஞ்ச விளக்குகளை ஏற்ற வேண்டும். அதாவது 5 அகல் விளக்குகளை எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு வகையான எண்ணெய் ஊற்றி தனித்தனியே தீபத்தை ஏற்ற வேண்டும்.
நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்கள் தான் பஞ்ச தீப எண்ணெய்கள் என்று குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு விளக்கிலும் இந்த ஒவ்வொரு எண்ணெய்களை ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றி, பைரவருடைய மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் எல்லா விதமான பிரச்சனைகளும் தீரும்.
இந்த நாளில் பைரவாஷ்டகம் வாசிப்பது உள்ளத்திலும், எண்ணத்திலும் நல்ல விஷயங்களை விதைக்கும். மேலும் நேர்மறை எண்ணங்கள் பெருகி குடும்பத்தில் இருக்கும் துஷ்ட சக்திகள் அத்தனையும் நீங்க செய்து எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று சுபிட்சம் அடைய செய்யும். பைரவரை வணங்குவதால் வறுமை, பகைவர்களின் தொல்லை, வியாபார முன்னேற்றம், தனலாபம், அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
Readmore: வேண்டுதலை நிறைவேற்றும் திருசெம்பொன் செய் பெருமாள் கோவில்..! எங்க இருக்கு தெரியுமா..?