வேடசந்தூர் அருகே சுற்றுலா வேன் மீது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பூசாரி கவுண்டன்பட்டியை சேர்ந்த 22 விவசாயிகள், ஆடி அமாவாசையை முன்னிட்டு கிடா வெட்டுவதற்காக ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ள நாத்த்ராயன் கோயிலுக்குச் சுற்றுலா வேனில் புறப்பட்டனர். இந்த வேனை ரஞ்சித் குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
வேன், வேடசந்தூர் அருகே அய்யர்மடம் பகுதியில் தேநீர் அருந்துவதற்காக சாலையின் ஓரமாக திரும்பியபோது, அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத லாரி பின்னால் மோதியது. இதில் வேன் இடித்துச் சென்று கவிழ்ந்தது. விபத்தில், ஓட்டுநர் ரஞ்சித் குமார் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய வேடசந்தூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற லாரியை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடி அமாவாசை நாளில் கிடா வெட்டச் சென்ற விவசாயிகள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம், அவர்களது கிராமத்திலும் மற்றும் சுற்று வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read more: அதிரடி.! இனி ரயில் நிலையங்களில் ‘ரீல்ஸ்’ எடுத்தால் ரூ.1,000 அபராதம்…!