சமீபத்தில் ரஷ்யாவிலும் ஜப்பானிலும் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்திருந்த நிலையில், ரஷ்யாவின் குரில் தீவுகளில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நிகழ்ந்தது. முதலில் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், பின்னர் 7.0 ரிக்டர் என உறுதிப்படுத்தப்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) இதைத் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம், ஜப்பானின் ஹொக்கைடோ மற்றும் ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பம் இடையே உள்ள எரிமலை தீவுகள் அருகே, 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதேபோன்று சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் இதற்கும் இடையிலான குறுகிய கால இடைவெளி, பசிபிக் பகுதிகளில் நிலநடுக்க செயல்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன எனக் காட்டுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்சேதம் அல்லது பொருள் சேதம் தொடர்பான தகவல்கள் இல்லை. ஆனால் கம்சட்கா தீபகற்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார கடற்கரைகளுக்கு சுனாமி அபாயம் இருப்பதாக ரஷ்ய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. “அலைகள் உயரம் குறைவாக இருக்கலாம், ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடற்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம்” என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நிலநடுக்கம் குறித்து ஒரு புவியியல் வல்லுநர் கூறுகையில்: “பசிபிக் தட்டு” (Pacific Plate) இயக்கம் தற்போது கவலையளிக்கிறது. கம்சட்கா மற்றும் குரில் தீவுகள் போன்ற இடங்கள் அதிக ஆபத்தான நிலவரத்தில் உள்ளன. உலகின் 80% க்கும் மேற்பட்ட பெரிய நிலநடுக்கங்கள் பசிபிக் ‘ரிங் ஆஃப் பயர்’ பகுதியில் தான் நடைபெறுகின்றன.” என்றனர்.
பசிபிக் பெருங்கடல் சுற்றியுள்ள இந்த பகுதி எரிமலைகள், நிலநடுக்கங்கள் அதிகம் நடைபெறும் உலகிலேயே ஆபத்தான இயற்கை வலயம் ஆகும். இங்கு தொடர்ந்து நில நடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படுகின்றன.
Read more: வங்கியில் கிளார்க் வேலை.. ரூ.64,480 சம்பளம்.. 10,277 காலிப்பணியிடங்கள்..!! உடனே விண்ணப்பிங்க..