தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூழல் சூடுபிடித்து வருகிறது. திமுக கூட்டணி உறுதியாக நீடிக்கிறது. அதிமுக – பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று சீமான் அறிவித்துள்ளார்.
இந்த சூழலில், தவெக தலைவர் விஜய், “என் தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும்” என்று அறிவித்துள்ளார். இதுவரை எந்தக் கட்சியும் தவெக உடன் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆனால் விஜய், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்கத் திட்டமிட்டுள்ளார். டிசம்பர் மாதத்திற்கு பின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என தவெக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் விஜய்யை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே இருவரும் விஜய்யை நோக்கி சாய்வு காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “விஜய்க்கு கூட்டம் கூடுகிறது, அது வாக்காக மாறுமா என்பதை தேர்தல் முடிவுகளே சொல்லும்” என தெரிவித்தார்.
அதேபோல், தினகரனும் பலமுறை விஜய்யை பாராட்டி பேசியதோடு, “விஜய்யுடன் செல்லக்கூடாதா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். எடப்பாடி பழனிசாமி, அமமுக மற்றும் ஓபிஎஸ் தரப்பினரை அதிமுக கூட்டணிக்குள் சேர்க்க விருப்பமில்லாமல் பிடிவாதமாக இருக்கிறார். இதனால், இரு தரப்பினரும் தவெக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது.
இப்படி தினகரன் மற்றும் ஓபிஎஸ் தரப்புகள் விஜய்யுடன் இணைந்தால், தென் மாவட்டங்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரிய சவால் உருவாகும். கடந்த தேர்தலில் அதிமுக வெற்றியடைய வேண்டிய 23 தொகுதிகளில் அமமுக போட்டியிட்டதால் வாக்குகள் பிளவுபட்டன. இந்த நிலையில் விஜயுடன் இணைந்து அமமுக போட்டியிட்டால் ஆட்சியில் மாற்றம் ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றனர்.