மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி டியூஷன் ஆசிரியரால் தொடர்ந்து ஒன்பது மாதங்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வன்கொடுமையின் விளைவாக மாணவி கர்ப்பமாகியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து 27 வயதான டியூசன் ஆசிரியர் மாணவியை புசாத் நகரத்திற்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு மாத்திரை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் மாத்திரை எடுத்த பிறகு மாணவியின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணையில், டியூசன் ஆசிரியர் குண்டேகர் மாணவியின் நம்பிக்கையைத் தவறாக பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. அவர், “உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று பொய்யான வாக்குறுதி அளித்து, ஒன்பது மாதங்களாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த வன்கொடுமைகளின் காரணமாக மாணவி கர்ப்பமாகியுள்ளார். ஆனால் சமீபத்தில் உடல்நிலை மோசமடைந்தபோது தான் சிறுமிக்கு தான் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட மாணவி இறப்பதற்கு முன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பாரதிய நியாய் சன்ஹிதா (BNS) மற்றும் போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. டியூசன் ஆசிரியரால் மாணவி கர்ப்பமாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.