அதிமுகவின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயண பாடல், லோகோ வெளியீட்டு நிகழ்ச்சியில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்ததால் தமிழ்நாடு ஏற்றம் பெற்றது.. கடந்த 50 மாத ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்கள் பெற்ற வேதனைகள், துன்பங்கள், கொடுமைகள் அத்தனையும் மக்களிடம் பட்டியலிட்டு எடுத்து சொல்லி, திமுக ஆட்சியை அகற்றுவது தான் எங்கள் நோக்கம்..
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று வரலாறு படைக்கும்.. வரும் 7-ம் தேதி என்னுடைய தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறேன்.. மக்களை நேரில் சந்தித்து, இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்து சொல்லி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி அதிமுக 2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்..” என்று தெரிவித்தார்.
அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் “ சென்னைக்கு அமித்ஷா வந்த போது கூட்டணி குறித்து தெளிவாக கூறிவிட்டார். அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமையில் கூட்டணி, அதிமுக ஆட்சியமைக்கும்.. முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ் என்று கூறிவிட்டார்.. திரும்ப திரும்ப அதை பற்றி கேட்பது சரியா?” என்று தெரிவித்தார்.
அப்போது தவெக கூட்டணி முடிவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் “ எல்லாக் கட்சிகளும் விமர்சனம் செய்யும் கட்சி தான்.. விஜய்யின் கூட்டணியின் முடிவு அவர் முடிவு.. அவரிடம் தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும்.. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும்..” என்று தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற தவெகவின் மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய், பாஜக திமுக உடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று அறிவித்தார். ஆனால் அவர் நேரடியாக அதிமுக உடன் கூட்டணி இல்லை என்று கூறவில்லை.. இந்த நிலையில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது விஜய்க்கு கொடுத்த மறைமுகமான அழைப்பாகவே பார்க்கப்படுகிறது. தவெகவும் – அதிமுகவும் கூட்டணி அமைப்பதில் ஆரம்ப முதலே ஆர்வம் காட்டி வருகின்றன.. விஜய் அதிமுக உடன் கூட்டணி வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது..