திருமலை திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில், ஆன்மிகப் பெருமை மட்டுமின்றி நாள்தோறும் நிகழும் திவ்ய அலங்காரங்களுக்கும் உலகப் புகழ்பெற்றது. அலங்காரப் பிரியரான வேங்கடேசப் பெருமாளுக்கு தினசரி 65 முதல் 70 கிலோ வரையிலான தங்க, வைர ஆபரணங்கள் சாற்றப்பட்டு வருகின்றன. அதேபோல், ஸ்பெயினின் குங்குமப்பூ, சீனத்து வாசனை திரவியமான புனுகு, நேபாள கஸ்தூரி, மைசூர் சந்தனம் மற்றும் தமிழகத்தின் பச்சை கற்பூரம் உள்ளிட்ட உலகெங்கிலுமிருந்து கொண்டுவரப்படும் நறுமணப் பொருட்களால் ஸ்ரீனிவாசன் ஆராதிக்கப்படுகிறார்.
எனினும், இத்தனை வாசனை திரவியங்களும் வண்ண மலர்களும் எம்பெருமானை அலங்கரித்தாலும், கனகாம்பரம் மலரும் கருவேப்பிலையும் மட்டும் மூலவரின் சந்நிதியில் ஒருபோதும் பயன்பாட்டுக்கு வருவதில்லை. இதற்குப் பின்னணியில் ஒரு சுவாரசியமான புராண நிகழ்வு கூறப்படுகிறது.
புராணங்களின்படி, முன்கோபத்திற்கு பெயர் பெற்ற பிருகு முனிவர் ஒருமுறை வைகுண்டம் சென்றபோது, திருமாலின் நெஞ்சில் எட்டி உதைத்ததாகவும், திருமாலின் மார்பில் குடிகொண்டிருந்த மகாலட்சுமி தாயார் இதனால் மனவருத்தம் அடைந்து பூவுலகுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. திருமகளின் பிரிவால் செல்வங்களை இழந்த எம்பெருமான், அவரை மீண்டும் அடைவதற்காகக் கலியுகத்தில் ஸ்ரீனிவாசனாகத் தோன்றி வகுளாதேவியின் ஆசிரமத்தில் வாழ்ந்து வந்தார். அப்போது ஆகாச ராஜனின் மகளாகப் பிறந்திருந்த பத்மாவதி தேவியைக் கண்டு மனம் கவர்ந்து மணம் முடிக்க விரும்பினார். முன்னதாக ராம அவதாரத்தின் போது வேதவதிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்தத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
மன்னரின் மகளைத் திருமணம் செய்யத் தேவையான பிரம்மாண்ட நிதிக்காக, ஸ்ரீனிவாசப் பெருமாள் குபேரனிடம் ஒரு கோடியே 14 லட்சம் பொன் வராகன்களைக் கடனாகப் பெற்று, கலியுக இறுதி வரை வட்டி செலுத்துவதாக உறுதியளித்தார். பின்னர் வகுளாதேவி மற்றும் நாரதரின் முன்னிலையில் ஸ்ரீனிவாசர் – பத்மாவதி தாயாரின் திருக்கல்யாணம் சகல வைபவங்களுடனும் குறைவின்றி நடந்தேறியது.
ஆனால், தனது வளர்ப்பு மகனுக்கு எந்தக் குறையும் இன்றித் திருமணம் செய்துவிட்டதாக வகுளாதேவி கொண்டிருந்த பெருமிதத்தில் ஒரு சிறிய திருவிளையாடலை நிகழ்த்த நாரதர் விரும்பினார். திருமண வைபவம் முடிந்த பின்னர் பத்மாவதி தாயாரிடம் சென்ற நாரதர், இத்தனை பெரிய விருந்திலும் திருமணச் சடங்குகளிலும் கருவேப்பிலையும் கனகாம்பரமும் சேர்க்கப்படாமல் விடுபட்டுப் போய்விட்டதே என்று சுட்டிக்காட்டினார். இதுவே பெருமாளுக்கும் பத்மாவதி தாயாருக்கும் இடையே சிறு மனஸ்தாபத்தை ஏற்படுத்தி, பின்னர் பெரும் வாக்குவாதமாக உருவெடுத்தது.
இதன் தொடர்ச்சியாக, பத்மாவதி தாயார் கோபித்துக்கொண்டு திருமலையை விட்டுப் பிரிந்து, திருச்சானூருக்குச் சென்று அங்கு தனித் திருக்கோயிலில் அமர்ந்ததாக ஐதீகம் விவரிக்கிறது. இந்த புராண நிகழ்வின் காரணமாகவே, திருமலை திருப்பதி கோயிலில் பெருமாளின் நைவேத்தியங்களிலோ வழிபாடுகளிலோ கருவேப்பிலையும், புஷ்ப கைங்கரியங்களில் கனகாம்பர மலரும் முற்றிலும் தவிர்க்கப்பட்டு வருகின்றன. இரு தேவியருடன் போற்றப்படும் பெருமாள், திருமலையில் தனித்து நின்று உலக பக்தர்களைக் கண் இமைக்காமல் காத்து அருள்பாலிப்பதன் பின்னணியில் இத்தகைய தேவ ரகசியங்களும் அடங்கியுள்ளன என்பது ஆன்மிக பெரியோர்களின் கருத்தாகும்.
Read More : பணியின் போது அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு ரொக்கம் வைத்திருக்கலாம்? தமிழ்நாடு அரசு விளக்கம்..!!



