கோரமான திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி நேபாளம் தவித்து வரும் நிலையில், உயிரிழந்த ஒரு பெண்ணின் உடலை இழுத்துச் சென்று அவரது காதணியைத் திருடிய கொடூரச் செயல் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகும் அந்த வீடியோவில், நாராயணி நதியில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு பெண்ணின் உடலை இரண்டு நபர்கள் மரக்கட்டைகள் மற்றும் அப்பெண் முடியை பிடித்து வெளியே இழுக்கின்றனர். பின்னர், பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் அந்தப் பெண்ணின் இரு காதுகளில் இருந்தும் காதணிகளைத் திருடிச் செல்வது பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்திய சித்வான் காவல் துறையினர், வீடியோவின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த மதன் குருங் (25) மற்றும் உமேஷ் சௌத்ரி (38) ஆகிய இருவரையும் வியாழக்கிழமை அதிரடியாக கைது செய்தனர்.
பேரிடர் மற்றும் துயரமான காலங்களில் இதுபோன்ற மனிதநேயமற்ற மற்றும் கொள்ளைச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எக்காரணம் கொண்டும் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று எச்சரித்துள்ள காவல் துறையினர், நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றனர்.
தற்போதைய நிலவரம்:
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட இந்த பயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 469 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், மாயமான 1,400-க்கும் மேற்பட்டோரைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் இன்று திபெத் பகுதியில், இயற்கையாக உருவான அணை உடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது, இதனை நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் நீர்மட்டம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதிய வெள்ள அபாயத்தைத் தொடர்ந்து, நேபாள அதிகாரிகள் மீட்புப் பணிகளை சுமார் 90 நிமிடங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ராசுவா மாவட்டத்தில் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன. இதற்கிடையில், அப்பகுதியில் இருந்த உள்ளூர் மக்கள் பாதுகாப்பைத் தேடி மலைப்பகுதிகளை நோக்கி அவசரமாகச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.



