உரிய தகவல் கொடுக்காமல் இடைநின்றால், மாணவர் விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா, கல்வி மற்றும் தொழில்துறை வாய்ப்புகளுக்காக இந்திய மாணவர்களின் கனவுநாட்டாக நீண்ட காலமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர்கல்விக்காக அமெரிக்கா செல்கின்றனர். தரமான கல்வி, நவீன வசதிகள், வேலைவாய்ப்பு வாய்ப்புகள் ஆகியவை இதற்கான காரணமாக இருக்கின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின், வெளிநாட்டு மாணவர்களுக்கான நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதில் மாணவர் விசா விதிமுறைகள் மிகவும் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் உரிய தகவல் கொடுக்காமல் இடைநின்றால், மாணவர் விசா ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இந்திய மாணவர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு மாணவர்களையும் மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தினால், வகுப்புகளை புறக்கணித்தால், அல்லது உங்கள் கல்லூரிக்கு தெரிவிக்காமல் நீங்கள் இடைநின்றால், உங்கள் மாணவர் விசா ரத்து செய்யப்படும். மேலும், நடவடிக்கைக்கு உள்ளாகும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் எப்போதும் விசா வழங்கப்படாது. ஆகவே எந்தவொரு பிரச்சினையையும் தவிர்க்க எப்போதும் உங்கள் விசாவின் விதிமுறைகளைப் பின்பற்றி உங்கள் படிப்பை தொடருங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.