அமெரிக்கா – ஈரான் இடையிலான ராணுவ மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஈரானைச் சேர்ந்த 5 கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தாக்கி செயலிழக்கச் செய்ததாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஈரானும் அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்க கடற்படைக் கப்பலை குறிவைத்து இரண்டு முறை ஏவுகணைகளை வீசியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. எனினும், அந்தக் கப்பல் தாக்குதல்களில் இருந்து தப்பி தொடர்ந்து பிராந்திய கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டதாக CENTCOM குறிப்பிட்டுள்ளது. இந்தச் சம்பவங்களில் அமெரிக்க வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் இருந்த ஈரானிய எண்ணெய் கப்பல்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. M/T Kaviz, M/T Charminar, M/T Horizon 1, M/T Riesco ஆகிய 4 கப்பல்கள் ஓமன் வளைகுடா பகுதியில் தாக்கப்பட்டதாகவும், Kharg தீவு அருகே M/T Derya என்ற மற்றொரு கப்பலும் குறிவைக்கப்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்பாக கப்பல்களில் இருந்த பணியாளர்களை வெளியேறுமாறு அமெரிக்கப் படைகள் அறிவுறுத்தியதாகவும் CENTCOM கூறியுள்ளது.
இதற்கிடையே, ஈரான் அமெரிக்காவுக்கு எதிராக பதிலடி நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. ஜோர்டானில் உள்ள Al-Azraq அமெரிக்க விமானப்படைத் தளத்தை ஏவுகணைகள் மூலம் தாக்கியதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் விமானங்களுக்கான பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு மையங்கள், விமானங்கள் நிறுத்தப்படும் பகுதிகள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் சேதமடைந்ததாக IRGC கூறியுள்ளது. இதற்கு மாறாக, ஈரானிலிருந்து ஏவப்பட்ட 18 ஏவுகணைகளை தங்கள் படைகள் இடைமறித்து அழித்ததாக ஜோர்டான் ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களுக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் கப்பல்களின் பணியாளர்களுக்கும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இரு நாடுகளும் தங்கள் பகுதிகளில் அமெரிக்க ராணுவத்தை அனுமதித்துள்ளதால், அங்குள்ள கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காகலாம் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானின் எண்ணெய் கப்பல்கள் மூலம் இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கும் அதன் பிராந்திய கூட்டாளிகளுக்கும் நிதி சென்றதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதனை பல பில்லியன் டாலர் மதிப்பிலான மறைமுக வர்த்தக வலையமைப்பின் ஒரு பகுதியாக அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே செப்டம்பர் 5ஆம் தேதி, அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலை ஈரான் தாக்க முயன்றதாக கூறி, 3 ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா அழித்திருந்தது. ஈரானின் கடற்படை தாக்குதல் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்ததாகவும் அமெரிக்க CENTCOM தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் தொடர்ந்து அமெரிக்க கடற்படைக் கப்பல்களை குறிவைத்தால், அதற்கு பதிலடியாக ஈரானின் எண்ணெய் கப்பல்கள் தொடர்ந்து தாக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார். உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மீது ஈரான் தொடர்ந்து கட்டுப்பாட்டை வைத்திருக்கும் நிலையில், ஈரானின் துறைமுகங்கள் மற்றும் பொருளாதாரத்தை முடக்கும் நடவடிக்கையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
Also Read: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் முடியாதது விஜய் ஆட்சியில் நடந்ததா? சட்டப்பேரவையில் சபாநாயகர் வெளியிட்ட பரபரப்பு கருத்து!



