கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழையும், நாளை முதல் 21-ம் தேதி வரை கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 98.6-100.4 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80.6-82.4 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல்,தென்கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலின் சில பகுதிகள், கேரள–கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்றும், நாளையும் 60 முதல் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.