தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜய், சீமான் என 4 முனைப்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கூட்டணிகள் தொடர்பாக புதிய மாற்றங்கள் வரப்போகும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணல் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
திருமாவளவன் பேட்டியில் கூறியதாவது: “பாஜகவுடன் கூட்டணியால் அதிமுகவுக்கு ஆபத்து. மகாராஷ்டிராவில் செய்ததைப்போல் பாஜக, பிராந்திய கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதே பாணியில் தமிழ்நாட்டிலும் இரண்டாம் இடம் பிடிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பாஜகவுடன் கூட்டணியைத் தொடர்ந்தால் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் அபாயம் உண்டு,” என அவர் எச்சரித்தார்.
மேலும், “பாஜக நினைப்பது மட்டும் நடந்துவிட்டால், தமிழ்நாட்டின் அரசியல் திமுக Vs பாஜக அல்லது திமுக Vs தவெக என மாறும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழலில் விஜய்யின் அரசியல் வருகை அதிமுகவுக்கு பெரும் சவாலாக உள்ளது. விஜய் வருகையால் திமுகக்கும் அதிமுகக்கும் தாக்கம் இருக்கும்; ஆனால் அதிமுகவுக்கே அதிக இழப்பு ஏற்படும்.
எம்ஜிஆரால் கட்டமைக்கப்பட்டு, அதிமுக ஈர்த்து வந்த வாக்கு வங்கி, விஜய் கவர்ச்சியால் கசிந்து போகும் அபாயம் உண்டு. இதை உணர்ந்து அதிமுகவினர் விழிப்புடன் செயல்பட வேண்டும்,” என கூறினார். அதே நேரத்தில், கரூர் துயர சம்பவம் குறித்து திருமாவளவன் குறிப்பிடுகையில், “கரூர் சம்பவம் விஜய்யின் அரசியல் பிம்பத்தில் கறை படிந்தது. தலைமைத்துவம் என்பது நெருக்கடிகளை திறம்பட கையாள்வதில் இருக்கிறது. அந்தச் சூழ்நிலையில் விஜய்யின் எதிர்வினை ஏமாற்றமளித்தது,” என கடும் விமர்சனம் எழுப்பினார்.



