இன்றைய வேகமான உலகில், நேரம் இல்லாதது போல தோன்றினாலும், உண்மையில் நாம் இழந்தது உடலின் சமநிலை தான். அலுவலக நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது, கார் பயணத்தில் நிம்மதியாக செல்லுவது, மொபைலில் மூழ்குவது இவை அனைத்தும் நவீன வாழ்க்கையின் அடையாளங்களாக மாறியுள்ளன. ஆனால் இந்த சுகமான வாழ்க்கை முறைதான் இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற மௌன கொலைகளுக்குக் காரணமாகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகம் இணைந்து ஐந்து நாடுகளில் இருந்து 14,000 பேரின் தரவுகளை ஆய்வு செய்துள்ளன. அதில் ஆச்சரியமான முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. தினசரி 20 முதல் 27 நிமிடங்கள் மட்டுமே நடப்பது, ஓடுவது அல்லது மிதிவண்டி ஓட்டுவது போன்ற எளிய உடற்பயிற்சிகள் செய்தாலே இதய நோய் அபாயம் 28 சதவீதம் வரை குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதிலும் சிறப்பு என்னவெனில், கூடுதலாக ஐந்து நிமிடம் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இருந்தாலே, ரத்த அழுத்தம் கணிசமாகக் குறைகிறது. நடப்பது, படிக்கட்டில் ஏறுவது, சைக்கிள் ஓட்டுவது இவை மிகச்சிறிய மாற்றங்களாக தோன்றினாலும், உடலுக்கு பெரும் பலனை அளிக்கும் என ஆராய்ச்சி கூறுகிறது. டாக்டர் ஜோ ப்ளாட்ஜெட் கூறுகையில், “நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உடலை மந்தமாக்கும். ஆனால் நடப்பது அல்லது நிமிர்ந்து நிற்பது ரத்த ஓட்டத்தை சீராக்கி இதயத்தை வலுவாக்கும்” என விளக்குகிறார்.
ஒரு நாளில் 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மனஅழுத்தத்தைக் குறைத்து நல்ல தூக்கத்தையும் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளனர். அதனால், உடற்பயிற்சிக்காக பெரிய நேரம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. தினசரி சிறு நடைப்பயிற்சியே உங்கள் இதயத்திற்கான “இயற்கை மருந்து” என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



