இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் உடல் நலம் என்பது பலருக்கு பின்னணியில் தள்ளப்பட்ட ஒன்று. வேலைச் சுமை, திரை சாதனங்களின் அதிகப் பயன்பாடு, நேரமின்மை போன்ற காரணங்களால் உடற்பயிற்சி என்பதே கடினமானதாக எண்ணப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், அந்த எல்லா தடைகளையும் தாண்டி, அனைவராலும் எளிதாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பயிற்சி மட்டும் இருக்கிறது; அது நடைப்பயிற்சி.
ஜிம் கட்டணம் இல்லை, பயிற்சியாளர்களின் அவசியம் இல்லை, சிறப்பு சாதனங்களும் தேவையில்லை. காலை நேரங்களில் சாலையோரமாகவோ, மாலை நேரங்களில் மைதானங்களிலோ, வீட்டின் மாடியிலோ ஒரு சிறு இடம் போதுமானது. வயது, உடல்நிலை என்ற வேறுபாடுகள் இல்லாமல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும் பயிற்சியாக நடைப்பயிற்சி இருக்கிறது.
இந்த எளிய பழக்கத்தின் மதிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. போலந்தின் லாட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் மேற்கொண்ட இந்த ஆய்வில், 2.27 லட்சம் பேரின் வாழ்வியல் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு, நடைப்பயிற்சி மனிதனின் இதய ஆரோக்கியம், மனநிலை மற்றும் ஆயுளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. தினமும் வெறும் 2,337 அடிகள் நடந்தாலே இதய நோய்களின் அபாயம் குறையத் தொடங்குகிறது. 3,967 அடிகள் நடந்தால் இளவயது மரண அபாயம் தள்ளிப் போகிறது. அதே நேரம், நாளொன்றுக்கு 6,000 முதல் 10,000 அடிகள் நடந்தால் உடல் முழுமையான ஆரோக்கிய நிலையை அடையும் என்பதும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு 1,000 அடிகள் அதிகரிக்கும்போதும் 15 சதவீதம் வரை அபாயங்கள் குறையும் என்பது இந்த ஆய்வின் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு.
முக்கியமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தகவல்கள் இன்னும் நம்பிக்கையளிக்கின்றன. இந்த வயதினர்கள் தினமும் 6,000 முதல் 10,000 அடிகள் நடந்தால், நடைப்பயிற்சி செய்யாதவர்களைவிட 42 சதவீதம் வரை மரண அபாயம் குறைவாக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான பலனை அளிப்பதாகவும் விஞ்ஞானிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
நடைப்பயிற்சி என்பது வெறும் உடல் பயிற்சி மட்டுமல்ல. அது மன அழுத்தத்தை குறைக்கும் மன நல மருந்தாகவும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கான முதலீடாகவும் திகழ்கிறது. தொழில்நுட்பம் நிரம்பிய இன்றைய சமூகவாசலில், சில நிமிடங்கள் நேரத்தை ஒதுக்கி நடப்பது என்பது நம்மை நாமே பாதுகாப்பதற்கான மிக எளிய வழியாகும்.
Read more: ”இளையராஜாவுக்கு உரிமை உள்ளது..” குட் பேட் அக்லி வழக்கில் தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு..!



