மத்திய கிழக்கு நாடுகளில் போர் தொடர்ந்து நீடித்துவரும் சூழலில், இஸ்ரேலை கடுமையாக எச்சரித்துள்ள ஈரான், “நாங்கள் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்புவோம்” என்று தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க ஜனாதிபதியின் மகனைக் கொல்லத் திட்டமிட்டதாக பரப்பப்பட்ட வதந்திகளுக்குப் பின்னால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
லெபனானை தளமாகக் கொண்ட ‘அல்-மனார்’ ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மேஜர் ஜெனரல் மொஹ்சின் ரெசாய் (Major General Mohsen Rezaei), இஸ்ரேலுடனான மோதல் மீண்டும் வெடித்தால் அது முந்தைய சுற்றுகளைப் போல இருக்காது என்றும், புதியதொரு போர்க்கட்டம் தொடங்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகன் பரோன் ட்ரம்பைக் கொல்ல ஈரான் திட்டமிட்டதாக நெதன்யாகு வேண்டுமென்றே பொய்யான தகவல்களைப் பரப்பி, வாஷிங்டனின் முடிவெடுக்கும் திறனை சீர்குலைத்துள்ளதாக ரெசாய் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கடந்த ஜூன் மாதம் போடப்பட்ட இடைக்கால போர்நிறுத்தம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவும் ஈரானும் தொடர் எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஈரான், சூழ்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், இஸ்ரேல் லெபனானில் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.



