என்ன உடை அணிய வேண்டும் என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்.. ஆனால் இந்த நாட்டில் ஜீன்ஸ் அணிந்தால் சிறை தண்டனை கிடைக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான்.. வடகொரியாவில் நீல நிற ஜீன்ஸ் அணிவது ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. ஜீன்ஸ் அணிந்தால் அதற்கு தண்டனையாக மிகப்பெரிய அபராதம் விதிக்கப்படும்.. அல்லது சிறைத்தண்டனை கூட கிடைக்கும்..
வட கொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது.. அந்நாட்டின் கடுமையான விதிகள் மற்றும் விசித்திரமான விதிமுறைகள் பற்றி சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்காவை கடுமையாக எதிர்க்கிறார். எனவே நீல நிற ஜீன்ஸ் அமெரிக்க கலாச்சாரத்தையும் ஏகாதிபத்தியத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று அவர் நம்புகிறார்.
இதன் காரணமாக, நீல நிற ஜீன்ஸ் அணிவது ஒரு கிளர்ச்சிச் செயலாகக் கருதப்படுகிறது. இந்தத் தடை ஆடைகளைப் பற்றியது மட்டுமல்ல, மக்கள் எப்படி சிந்திக்கிறார்கள் மற்றும் நடந்துகொள்கிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்தும் ஒரு பெரிய சித்தாந்தத்தின் ஒரு பகுதியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன..
வட கொரியாவில், மக்கள் அணியும் உடைகள் முதல் அவர்களின் சிகை அலங்காரங்கள் வரை மற்றும் எந்த நிறங்களில் உடை அணிய வேண்டும் என்பதை கூட அரசாங்கம் தீர்மானிக்கிறது. அங்கு “ஃபேஷன் போலீஸ்” என்று ஒரு அமைப்பு உள்ளது, அதன் வேலை யாராவது விதிகளை மீறுகிறார்களா என்பதைச் சரிபார்ப்பது. யாராவது நீல நிற ஜீன்ஸ் அணிந்தால் அல்லது விற்பனை செய்தால், அவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சிறையில் அடைக்கப்படலாம்.
மேற்கத்திய லோகோக்கள் கொண்ட டி-சர்ட்கள், தோல் ஜாக்கெட்டுகள், ஹேர் கலரிங் செய்வதற்கு அங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசபக்தியற்ற அல்லது மேற்கத்திய ஆடைகள் அல்லது அமெரிக்க செல்வாக்குடன் தொடர்புடைய பிற பொருட்களுக்கும் இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரியா, அமெரிக்காவுடன் தொடர்புடைய எதையும் ஆபத்தானதாகவோ அல்லது தேச விரோதமாகவோ கருதுகிறது.
உலகின் பிற பகுதிகள் ஃபேஷனை சுதந்திரத்தையும் ஆளுமையையும் வெளிப்படுத்தும் ஒரு வழியாகப் பார்க்கும்போது, வட கொரியா இதனை மக்களைக் கட்டுப்படுத்தும் ஒரு வழியாகக் கருதுகிறது. எனவே வட கொரிய இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை விட, அரசு அறிவுறுத்தி உள்ள ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும்..
இந்த அடக்குமுறை நாம் அணியும் உடைகளிலும், கருத்து சுதந்திரம் எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. உலகின் பல பகுதிகளில், மக்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த ஜீன்ஸ் போன்ற ஆடைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் வட கொரியாவில், மக்களுக்கு அந்த அடிப்படை சுதந்திரம் கூட மறுக்கப்படுகிறது..
Read More : ஒரே பெண்ணை திருமணம் செய்த 2 சகோதரர்கள்.. பழங்கால மரபை பின்பற்றி பலதார மணம்.. எங்கு தெரியுமா?