புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சி விளக்கப் பொதுக்கூட்டத்தில், அமைச்சர் முகமது பர்வேஸ் பேசிய நிதி ஒதுக்கீட்டு விவரங்கள் எதிர்பாராத வகையில் பேசுபொருளாகியுள்ளன. திட்டங்களின் சாதனைகளை விளக்கிக் கொண்டிருந்த அமைச்சர், நிதி தொடர்பான தொகைகளை அடுத்தடுத்து குறிப்பிட்டபோது, கூட்டத்தில் இருந்தவர்கள் குழம்பியதுடன் சிரிப்பையும் வெளிப்படுத்தினர்.
தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் சாதனை விளக்கக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாநகர தவெக சார்பில் திலகர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட அமைப்புச் செயலாளர் மாஜி விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார். இதில் பேசிய அமைச்சர், தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் 100 நாள் செயல்பாடுகள் குறித்து பட்டியலிட்டு பேசினார்.
200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம், விவசாயிகளுக்கான ரூ.75,000 வரையிலான கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, டெல்டா குறுவை சாகுபடிக்காக அரசு ஒதுக்கிய நிதி குறித்த விவரங்களை அவர் எடுத்துரைத்தார்.
அப்போது நிதி ஒதுக்கீட்டு தொகையை விளக்கும் விதத்தில் அமைச்சர் குறிப்பிட்ட எண்கள் தெளிவில்லாமல் தொடர்ந்து மாறியதாகக் கூறப்படுகிறது. இதனால் மேடையில் இருந்தவர்களும், கூட்டத்தில் பங்கேற்றவர்களும் ஒருகட்டத்தில் என்ன கணக்கு என புரியாமல் சிரிக்கத் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டத்தில் இருந்த சிலர் இதனை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டனர். நாள் முழுவதும் வேலை செய்து சோர்வுடன் இருப்பவர்களுக்கு சமூக வலைதளங்களில் வெளியாகும் அரசியல் பேச்சுகள் சில நேரங்களில் பொழுதுபோக்காக அமைவதாகவும், அவற்றை கேட்கும்போது மன அழுத்தம் குறைவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அந்த வகையில், அமைச்சர் நேரடியாக மேடையில் பேசியபோதே கணக்கு விவரங்கள் குழப்பமாக அமைந்ததால், கூட்டத்தில் இருந்தவர்களுக்கு எதிர்பாராத சிரிப்பு தருணம் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். தவெகவின் 100 நாள் சாதனைகளை விளக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம், அமைச்சரின் ‘கணக்கு’ பேச்சால் வேறு காரணத்திற்காகவும் கவனம் பெற்றுள்ளது.
Also Read: “ரூ.2 கோடி இருப்பதாக சொன்னால் என் அம்மாவே நம்ப மாட்டார்!” – அமைச்சர் ரமேஷ் பரபரப்பு பேச்சு..



