பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகள் மிகவும் பிரபலமானவை.. அந்த வகையில் நேற்று முன் தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. நேற்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்த நிலையில், இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர்.. சீறிப் பாயும் காளைகளின் திமிலை படித்து மாடு பிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர்..
இந்த அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டியை முதல்வர் மு.க ஸ்டாலின் அமைச்சர்களுடன் அமர்ந்து ரசித்து பார்வையிட்டார்.. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கண்ணப்பன், எம்.பிக்கள், சு.வெங்கடேசன், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்..
இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டினை காண வந்த முதல்வர் மு.க ஸ்டாலின் 2 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெறும் மாடுபிடி வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அலங்காநல்லூரில் ரூ.2 கோடி மதிப்பிட்டில் ஜல்லிக்கட்டு மற்றும் உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்..
இந்த சூழலில் முதல்வர் இந்த அறிவிப்பை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக, மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள்.
ஆகா, தமிழ்ப் பண்பாட்டை ஊக்குவிக்கப் போகிறார் என்று அனைவரும் நினைத்தோம். ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை, ஒரு ரூபாய் கூடக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று, மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப் போகிறோம் என்று மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் திரு ஸ்டாலின்..
ஏற்கனவே, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும், இந்த ஐந்து ஆண்டுகளில், கொடுக்கப்பட வேண்டிய சுமார் ரூ.60,000 ஊக்கத்தொகை எப்போது வருமென்று தெரியவில்லை. இப்படி தொடர்ந்து வெற்று வாக்குறுதிகள் கொடுத்து யாரை ஏமாற்றலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என்பது தெரியவில்லை.
முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களுக்குப் பிடித்த “பேரு பெத்த பேரு, தாக நீலு லேது” என்ற தெலுங்குப் பழமொழி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முழுமையாகப் பொருந்தும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..



