லஞ்சம் மற்றும் ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன், மனசாட்சி உள்ள உண்மையான மக்களாட்சியை எப்போதும் சமரசமின்றி தொடர்வோம் என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்” என தனது வழக்கமான பாணியில் கூறிய அவர், கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் யாருக்கும் வழங்கிடாத பெருவாரியான வாக்குகளையும் பேரன்பையும் வழங்கி, வாகை சூடும் வரலாற்றை மீண்டும் நிலைநாட்டி, என்னை உங்களின் முதல் சேவகனாக அமர்த்திய மக்களுக்கு நன்றிக்கடனைத் திருப்பிச் செலுத்தும் தருணம் இது. தற்போது தமிழகத்தில் நடைபெறுவது சாமானிய மக்களின் தலைமையிலான ஆட்சி. இந்த நல்லாட்சி மென்மேலும் வலிமைபெற மக்களின் பேராதரவு எப்போதும் தொடர வேண்டும்” என தெரிவித்தார்.
இடைத்தேர்தல் பரப்புரை குறித்துப் பேசிய அவர், செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2-ஆம் தேதிகளில் மதுராந்தகம் தொகுதியிலும்; செப்டம்பர் 30 மற்றும் இன்று (அக். 4) தாராபுரம் தொகுதியிலும் இறுதிக்கட்ட வாகனப் பிரசாரம் மேற்கொண்டதை சுட்டிக்காட்டினார். பிரசாரத்தின் போது செங்கல்பட்டு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்கள் அளித்த எழுச்சிமிகு வரவேற்பும் பாசமும் எதற்கும் ஈடில்லாதது என்றும், இதற்காக மக்களுக்குத் தன் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருப்பதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், இவ்வளவு காலமாக மக்களை ஏமாற்றி வந்த ‘தீய சக்தி’யான திமுக-வையும், ‘தீர்ந்துபோன சக்தி’யான அதிமுக-வையும் மக்கள் இத்தேர்தலில் அடியோடு புறந்தள்ள வேண்டும். மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் சார்பில் களம் காணும் தவெக வேட்பாளர்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோருக்கு நமது வெற்றிச் சின்னமான ‘விசில்’ சின்னத்தில் பொன்னான வாக்குகளை வழங்கி மாபெரும் வெற்றியைத் தேடித்தர வேண்டும்” என்றார். மக்கள் நலனைக் காப்பதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை என்றும், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்று தெரிவித்தார்.



